ஸ்விக்கி டெலிவரி பாய் முதல் தொழில்முனைவோர் வரை: இளைஞர் கற்று தரும் வெற்றி ஃபார்முலா..!!
தற்போது பெரும்பாலான இளைஞர்களுக்கு பார்ட் டைம் வேலைகளாகவும் சிலருக்கு முழு நேர வேலைகளாகவும் டெலிவரி பார்ட்னர் வேலைகள் வரப்பிரசாதமாக கிடைத்துள்ளன. கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், வேலை இழந்தோர் என பலரும் இதன் மூலம் வருவாய் ஈட்டுகின்றனர். அப்படி டெலிவரி வேலையில் சேர்ந்த ஒரு இளைஞர் தற்போது 2 நிறுவனங்களுக்கு முதலாளியாக மாறியுள்ளார்.
பெங்களூரை சேர்ந்த கௌஷிக் கார்வி என்பவரின் வெற்றி பயணம் பலரையும் வியக்க வைத்துள்ளது. தற்போது இரண்டு வெற்றிகரமான தொழில்களை நடத்திவரும் இவர், தனது கடந்த கால கடினமான உழைப்பு மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். பெங்களூருவில் உள்ள ACS காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் கல்லூரியில் கணினி அறிவியல் பயின்றவர் கௌஷிக் கார்வி.

சரியாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஸ்விக்கி நிறுவனத்தில் பகுதி நேர டெலிவரி பார்ட்னராக சேர்ந்தார். கூகுள் போட்டோஸ் தனக்கு பழைய ஸ்விக்கி டெலிவரி ஐடி கார்டு புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்ட கௌஷிக், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் ஸ்விக்கி டெலிவரி செய்யும்போது என் நண்பர்களைப் பார்த்தால் ஓடி ஒளிந்துகொள்வேன். நீண்ட நேரம் உழைப்பது கடினம் என்பதை தாண்டி, என் நண்பர்கள் என்னை வெறும் ஒரு ‘டெலிவரி பாயாக’ மட்டும் பார்த்துவிடுவார்களோ என்ற பயமும் கூச்சமும் எனக்குள் இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் 9 ஆண்டுகளுக்கு பின் அவர் பெங்களூரின் பிரபலமான சுயதொழில் முனைவோராக உருவெடுத்துள்ளார். பெங்களூருவின் ஆர்.ஆர். நகர் குதியில் இவர் ‘Mangalore in Bangalore’ என்ற பெயரில் மங்களூரு பாணி கடல் உணவுகளை விற்கும் ஒரு பிரபல உணவகத்தை நடத்தி வருகிறார். தனது உணவகத்தை தாண்டி, கடல் உணவு வணிகம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் ‘கௌஷிக் சீஃபுட்ஸ்’ என்ற நிறுவனத்தையும் அவர் கட்டமைத்து வருகிறார்.
தனது வெற்றியின் உச்சியில் இருக்கும் கௌஷிக், தனது கடினமான காலக்கட்டத்தில் தனக்கு வாழ்வாதாரம் வழங்கிய ஸ்வில்கி நிறுவனத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. என் வாழ்நாளின் கடினமான நாட்களில் எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கியதற்கு ஸ்விகிக்கு நன்றி என தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கௌஷிக்கின் இந்த பயணம் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நெட்டிசன்கள் பலரும், எந்த வேலையும் சிறியதல்ல என்பதை இந்தச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும், இதுதான் உண்மையான ‘Rags to Riches’ கதை, விடாமுயற்சியுடன் போராடுவதற்கான மிகச்சிறந்த உதாரணம் என கௌஷிக்கின் கடின உழைப்பை பாராட்டி வருகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
