மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் வியாழக்கிழமை பலப்பரீட்சை செய்ய உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்நிலையில், ஸ்டம்புகளை தகர்ப்பது குறித்து பவுலர்களுக்கு பாடம் எடுத்துள்ளார் மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லசித் மலிங்கா.
வான்கடே மைதானத்தில் மும்பை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது பவுலர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை மலிங்கா மேற்பார்வையிட்டுள்ளார். எதிர்முனையில் வைக்கப்பட்ட ஒற்றை ஸ்டம்பை தகர்க்க வேண்டும் என்பது தான் டாஸ்க். அதை அர்ஜுன் டெண்டுல்கர் உள்ளிட்ட மும்பை பவுலர்கள் செய்ய தவறியுள்ளனர்.
இந்நிலையில், அந்த பணியை எப்படி வெற்றிகரமாக செய்வது என மலிங்கா செய்து காட்டியுள்ளார். பந்து வீசி எதிரே இருந்த ஒற்றை ஸ்டம்பை தகர்த்துள்ளார். அந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் அவரது பவுலிங் நேர்த்தி ஓய்வுக்கு பிறகும் அப்படியே இருப்பதை வெளிக்காட்டுகிறது.
மேலும், இந்த வீடியோ மலிங்கா களத்தில் ஆக்டிவாக செயல்பட்ட நாட்களை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பவுலர்களில் ஒருவராக மலிங்கா அறியப்படுகிறார். யார்க்கர் வீசுவதில் வல்லவர்.
2009 முதல் 2019 வரையில் ஐபிஎல் கிரிக்கெட் விளையாடி இருந்தார் மலிங்கா. அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடியவர். 122 போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 2019 சீசனில் சென்னை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி ஓவரை வீசி 9 ரன்களை டிஃபென்ட் செய்து மும்பை அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவியவர். அதுவே அவரது கடைசி போட்டியாக அமைந்தது.