Last Updated:
கர்நாடகா கோலாரில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை துரத்தி செயின் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் பட்டப்பகலில் தனியாக சென்ற பெண்ணை தாக்கி, செயின் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள முளபாகிலு நகரில் பெண் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அவரின் பின்னால் இளைஞர்கள் இருவர் பைக்கில் பின்தொடர்ந்துள்ளனர். அதைக் கண்டதும் உள்ளுக்குள் அச்சம் கொண்ட பெண், சற்று வேகமாக சென்று ஓரிடத்தில் நின்றுள்ளார். விடாமல் துரத்தி வந்த இளைஞர்களில் ஒருவர், பைக்கில் இருந்து இறங்கி அந்த பெண்ணை நெருங்கி சென்றுள்ளார்.
அவர்களின் திட்டத்தை உணர்ந்த பெண், தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோட முயற்சித்துள்ளார். இருப்பினும் அந்த பெண்ணை துரத்திச் சென்ற கொள்ளையன், அவரை கீழே தள்ளி கழுத்தில் அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்றுள்ளார். அப்போது, கடுமையாக போராடிய பெண், சத்தம் போட்டு கூச்சல் எழுப்பியுள்ளார். அதில், பீதியடைந்த கொள்ளையர்கள், அந்த பெண் அணிருந்திருந்த கவரிங் செயினை மட்டும் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால், செயின் பறிப்பு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியானது. அது போலீசாரின் கண்களில் பட்டதும், சிசிடிவி ஆதாரத்தின் அடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண், நங்கலி காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலர் ஒருவரின் மனைவி என்பது தெரியவந்துள்ளது. செயின் பறிப்பு சம்பவம் வெளியே தெரிந்ததால் கவுர பிரச்சினை என கருதி அவர்கள் புகார் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
June 28, 2025 5:22 PM IST