டெண்டர்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஏஜென்சி, மாநில அரசின் எந்த ஒரு பொருளாதார உதவியும் இல்லாமல் 20 வருடங்களுக்கு FTO வை அதன் சொந்த செலவில் வடிவமைப்பது, கட்டமைப்பது, இயக்குவது மற்றும் பராமரிப்பது போன்றவற்றில் ஈடுபடலாம். இது KSSIIDC அமைக்கும் முதல் FTO ஆகும். “இதன் மூலமாக கர்நாடகாவின் விமான பயிற்சித் திறன் வலுப்படுத்தப்பட்டு, திறன் பெற்ற தொழில் வல்லுநர்களை உருவாக்கலாம்” என்று ஒரு மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
இந்த திட்டத்திற்காக 3500 சதுர அடி நிலத்தை KSSIIDC குத்தகைக்கு எடுக்க உள்ளது. இதில் 1500 சதுர அடி விமான பணிமனைக்காகவும், 2000 சதுர அடி வகுப்பறைகள் மற்றும் அலுவலகங்களுக்காகவும் ஒதுக்கப்படும். தேர்வு பெறும் ஏஜென்சி வகுப்பறைகள், ப்ளைட் சிமுலேட்டர்கள், ஒரு நூலகம், ரேடியோ டெலிபோன் பயிற்சி மற்றும் சோதனை அறைகள், தகவல் அறைகள், பயிற்றுநர்களுக்கான அலுவலகங்கள், மாணவர்களுக்கு தங்குவதற்கான இடங்கள், இணையம், தொலைத்தொடர்பு வசதிகள் உட்பட அனைத்து அத்தியாவசிய உள்கட்டமைப்புகளையும் அமைக்க வேண்டும். விமான பணிமனை பொறுத்தவரை, லைட்டிங், அலாரம், சிசிடிவி கேமராக்கள், பார்க்கிங் செய்வதற்கான இடங்கள் மற்றும் பொறியியல் ஊழியர்களுக்கான அலுவலக இடம் போன்றவை அடங்கும்.
அடிப்படையான நெருப்பு பாதுகாப்பு, ஆம்புலன்ஸ் சேவைகள், விமான போக்குவரத்துக் கட்டுப்பாடு, வானிலை ஆதரவு, விமான நிலைய பராமரிப்பு போன்ற உள்கட்டமைப்புகளில் KSSIIDC ஆதரவு வழங்கும். எனினும், தேர்வு செய்யப்படும் ஏஜென்சியானது மின்சாரம், பாதுகாப்பு மற்றும் ஹவுஸ் கீப்பிங் போன்ற செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் FTO ஆனது, டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷன் (DGCA), யூனியன் மினிஸ்ட்ரி ஆஃப் சிவில் ஏவியேஷன் (MoCA) மற்றும் பியூரோ ஆஃப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (BCAS) ஆகியோரால் அமல்படுத்தப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
FTO ஓராண்டுக்கு 100 மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதல் ஆண்டில் 50 மாணவர்களுடன் ஆரம்பித்து, அதன் பிறகு 3வது ஆண்டில் படிப்படியாக அதனை 100 ஆக உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டுள்ளது. மேலும், செயல்பாடு துவங்கிய 3 மாதங்களுக்குள் குறைந்தபட்சம் 3 விமானங்கள் களமிறக்கப்பட வேண்டும் என்றும், அதன் பிறகு DGCA விதிகளுக்கு உட்பட்டு, ஒரு வருடத்திற்குள் எத்தனை சேர்க்கப்பட வேண்டும் என்பது தெரிவிக்கப்படும் என்று அரசு வெளியிட்ட டெண்டர் டாக்குமெண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிபந்தனைகள் பொருந்தும்:
இந்த விமான பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை என்பது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் மாணவிகளுக்காக 25 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இவர்களிடமிருந்து சலுகை முறையில் கட்டணங்கள் வசூலிக்கப்படும். இடத்திற்கான குத்தகையைப் பொறுத்தவரை, ஒரு சதுர அடிக்கு 650 ரூபாய் வழங்கப்படும்.
மேலும், ஒவ்வொரு 3 வருடங்களுக்கு ஒருமுறை இது 15 சதவீதமாக அதிகரிக்கப்படும். தேர்வு செய்யப்படும் ஏஜென்சி தேவையான அனைத்து அப்ரூவல்களையும் பெற வேண்டும் மற்றும் கட்டுமானத்தைத் துவங்குவதற்கு முன்பு ஒரு விரிவான திட்ட அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும். உள்கட்டமைப்பு, ஊழியர்கள் மற்றும் செயல்முறைகளைப் பொறுத்தவரை, ஏஜென்சி DGCA வின் தேவைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.
தர்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ் மற்றும் தகுதி பெற்ற பயிற்றுநர்களைக் கொண்டு பாதுகாப்பான செயல்பாடுகளை FTO உறுதி செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தம் காலாவதியானாலோ அல்லது துண்டிக்கப்பட்டாலோ அனைத்து சொத்துக்களும் எந்த ஒரு செலவும் இல்லாமல் KSSIIDCக்குச் சொந்தமாகும். இதில் ஏதேனும் தாமதம் அல்லது விதிகளுக்கு இணங்க மறுத்தால் அபராதங்கள் விதிக்கப்படும்.
இதற்கு முன்பு விமான அனுபவம் மற்றும் வலிமையான பொருளாதார தகுதிச் சான்றிதழ்கள் கொண்டிருப்பவர்கள் கருத்தில் கொள்ளப்படுவார்கள். கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை, கலாபுரகி, மைசூரு மற்றும் பெலகாவி போன்ற விமான நிலையங்கள் தனியார் நிறுவனங்கள் மூலமாக இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
June 02, 2025 10:31 PM IST

