ஷா ஆலமின் செக்ஷன் 28இல் உள்ள taman Alam Megah-வில் கடந்த மாதம் நடந்த கொலைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த ஏழு சந்தேக நபர்களில் மூவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை சந்தேக நபர்களின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டதைத் தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செப்டம்பர் 4 மற்றும் 7ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் ஷசெலி கஹார் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 (கொலை) மற்றும் பிரிவு 149 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படும் இவ்வழக்கில், புதிதாகக் கைது செய்யப்பட்ட மூவர் மீதும் குற்றச்சாட்டுப் பதிவு செய்ய உத்தரவு பெறப்பட்டுள்ளது. அதேவேளையில், தேடப்பட்டு வரும் மற்ற நால்வரைப் பிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று சிலாங்கூர் காவல் துறைத் தலைமையகத்தில் அவர் கூறியதாக ‘பெர்னாமா’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
Taman Alam Megah-வில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தில், 23 வயதுடைய நபர் ஒருவர் முதலில் ஆயுதத்தால் வெட்டப்பட்டு, பின்னர் கார் மோதியதில் உயிரிழந்தார். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக இரண்டு சகோதரர்கள் உட்பட எட்டு பேர் மீது செப்டம்பர் 4ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. மேலும் ஏழு சந்தேக நபர்களைத் தேடி வருவதாக ஷசெலி செப்டம்பர் 7ஆம் தேதி தெரிவித்தார். இரு கும்பல்களுக்கு இடையிலான ஆதிக்கப் போட்டியே இந்த மோதலுக்குக் காரணம் என்று நம்பப்படுவதாக அவர் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.



