Last Updated:
தொடக்க விழாவில் அரிஜித் சிங், ஸ்ரேயா கோஷல் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கலை நிகழ்ச்சிகளில் ஷ்ரத்தா கபூர், வருண் தவான், திஷா பதானி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பிரமாண்டமாக தொடங்கவுள்ள ஐபிஎல் 2025 தொடக்க விழாவில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இது விழாவின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
உலகின் மிகவும் பணக்கார கிரிக்கெட் ப்ரீமியர் லீக்கான ஐபிஎல் தொடர் வரும் சனிக்கிழமை மார்ச் 22ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது. இதுவரை 17 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 18 ஆவது சீசன் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடருக்காக தற்போது 10 அணிகளின் வீரர்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். வலைப் பயிற்சியுடன் உள்மட்ட அளவில் தினமும் 20 ஓவர் போட்டிகள் அணிகளுக்குள் நடத்தப்படுகிறது.
18 ஆவது சீசனுக்கான தொடக்கவிழா கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை ஐபிஎல் நிர்வாகம் கவனித்து வருகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
தொடக்க போட்டியில் ஷாரூக்கானின் கொல்கத்தா அணி விளையாடவிருப்பதால் அவர் தரப்பில் பல இந்தி சினிமா நட்சத்திரங்களுக்கு போட்டியை காண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சல்மான் கான், விக்கி கவுசல், சஞ்சய் தத், கேத்ரினா கைஃப், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் தொடக்க விழாவில் பங்கேற்கிறார்கள்.
இதற்கிடையே சல்மான் கான் தனது சிக்கந்தர் படத்தை விளம்பரப்படுத்துவதற்கு தொடக்க விழாவை பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படம் மார்ச் 30 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
தொடக்க விழாவில் அரிஜித் சிங், ஸ்ரேயா கோஷல் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கலை நிகழ்ச்சிகளில் ஷ்ரத்தா கபூர், வருண் தவான், திஷா பதானி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
March 19, 2025 6:27 PM IST


