Last Updated:
ஜபல்பூர் ரயில் நிலையத்தில் 20 ரூபாய் சமோசாவுக்காக பயணியின் ஸ்மார்ட் வாட்ச் பறிக்கப்பட்டது.
20 ரூபாய் சமோசாவுக்கு பல ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்சை பறித்த சமோசா வியாபாரியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் இரண்டு சமோசா வாங்கியுள்ளார். அதற்காக அவர் டிஜிட்டல் பரிவர்த்தனையான ஜிபே மூலம் பணம் செலுத்தியுள்ளார். ஆனால், நெட்வொர்க் பிரச்சனையால் பணம் செல்லவில்லை. இதனையடுத்து அந்தப் பயணி வியாபாரியின் ஜிபே ஸ்கேனர் கோடை போட்டோ எடுத்துக்கொண்டு பிறகு பணம் அனுப்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
இதனை ஏற்க மறுத்த அந்த சமோசா வியாபாரி, பயணியின் சட்டையைப் பிடித்து இழுத்து பணம் கேட்டுள்ளார். அந்த சமயத்தில் அவருக்குப் பின்னால் அவர் செல்ல வேண்டிய ரயில் நகரத் துவங்கிவிட்டது. உடனே மீண்டும் ஒருமுறை அந்தப் பயணி ஜிபே மூலம் பணம் செலுத்த முயற்சி செய்தார். இருந்தபோதும் பணம் செல்லவில்லை.
நெட்வொர்க் பிரச்சனையால் பணம் வரவில்லை என்றாலும், விடாத அந்த சமோசா வியாபாரி பயணியைப் பிடித்து இரண்டு சமோசாவுக்கான ரூ. 20-ஐ கேட்டு அடாவடி செய்தார். பின்னர் அந்தப் பயணி ரயிலைப் பிடிக்க வேண்டிய காரணத்தால் 20 ரூபாய் சமோசாவுக்காக தன் கையில் இருந்த பல ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்சைக் கழற்றி, அந்த வியாபாரியிடம் கொடுத்தார். அதன் பின்னரே அவரை அந்த சமோசா வியாபாரி விட்டுள்ளார். மேலும், அவரிடம் இரண்டு சமோசாக்களைக் கொடுத்து அனுப்பினார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்தச் சம்பவம் பார்ப்பவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 20 ரூபாய் சமோசாவுக்கு பயணியை ரயிலில் ஏறவிடாமல், அனைவர் முன்னிலையிலும் சட்டையைப் பிடித்து இழுத்து, அவரிடம் இருந்து ஸ்மார்ட் வாட்ச் வாங்கியது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Shameful incident at Jabalpur , Railway Station
A passenger asked for samosas, PhonePe failed to pay, and the train started moving. Over this trivial matter, the samosa seller grabbed the passenger’s collar, accused him of wasting time, and forced the money/samosa. The passenger… pic.twitter.com/Xr7ZwvEVY2— Honest Cricket Lover (@Honest_Cric_fan) October 18, 2025
இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்த ஜபல்பூர் கோட்ட ரயில்வே மேலாளர், அந்த வியாபாரியின் உரிமத்தை ரத்து செய்துள்ளார். மேலும், ரயில்வே போலிஸார் அந்த வியாபாரி மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்துள்ளனர்.
தற்போது இந்தியா முழுக்க டிஜிட்டல் பரிவர்த்தனை முதன்மையாக இருந்துவரும் சூழலில், பல சமயங்களில் இதுபோல் நெட்வொர்க் பிரச்சனையால் பணம் அனுப்ப முடியாமல் சிக்கலை சந்திக்க நேரிடுகிறது. எனவே எப்போது எங்குச் சென்றாலும், அவசர தேவைக்கென கையில் பணம் வைத்திருப்பது நல்லது என்றும் அந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
October 19, 2025 6:21 PM IST