Last Updated:
மூன்று லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு செய்திட ஹெக்டேருக்கு ரூ.2000 வீதம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உழவர்களுக்கு விதைகள், உரங்கள் விற்பனை செய்ய 1000 இடங்களில் முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.45,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2025-26-ஆம் நிதி ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், வேளாண் பட்டதாரிகள் மற்றும் உழவர்களுக்கு உதவிடும் வகையில் 1000 இடங்களில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
இத்திட்டத்தின்கீழ், 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த மையங்களை அமைத்திட 30 விழுக்காடு மானியமாக வழங்கப்படும் என்றும், இதற்காக 42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த மையங்களில் உழவர்களுக்குத் தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி பரப்பினை அதிகரித்து உணவு தானிய உற்பத்தியினை உயர்த்திட 102 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் மூன்று லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு செய்திட ஹெக்டேருக்கு ரூ.2000 வீதம் மானியம் வழங்கப்படும் என்றும் இதற்காக 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் மலைவாழ் உழவர்கள் மேம்பாட்டுக்கென சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு மற்றும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்பட உள்ளது. அதன்படி, விபத்து மரணத்திற்கான இழப்பீடு ஒரு லட்சம் ரூபாயில் இருந்து இரண்டு லட்சம் ரூபாயாகவும், இயற்கை மரணத்திற்கான நிதி உதவி 20 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ”முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்” 15 திட்டக்கூறுகளுடன் 142 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளது.
இதையும் படிக்க: வேளாண் பட்ஜெட் 2025 – முக்கிய அம்சங்கள் என்னென்ன..?
மக்காச்சோள சாகுபடி மூலம் உழவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கச் செய்திடும் வகையில் மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் 40 கோடியே 27 லட்சம் ரூபாயில் மத்திய, மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்றும் இதன்மூலம் 79,000 உழவர்கள் பயனடைவார்கள் என்றும் வேளாண் துறை அமைச்சர் தெரிவித்தார். வேளாண் துறைக்கு மொத்தம் 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை 42 ஆயிரத்து 282 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
March 15, 2025 1:18 PM IST
TN Agriculture Budget 2025: வேளாண் துறைக்கு மொத்தமாக ரூ.45,600 கோடி ஒதுக்கீடு..! எந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி?


