முருகப்பெருமானின் கையில் இருக்கக்கூடிய வேல் பராசக்தியின் அம்சம் பொருந்தியது என்பதால் அதை நாம் வழிபாடு செய்யும் பொழுது பராசக்தியின் அருளும் அதேசமயம் முருகப்பெருமானின் அருளும் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும்.
அதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் நாம் நினைத்தது நடக்கும் என்றே கூறப்படுகிறது அதனால் தான் இன்றைய காலத்தில் வேல் வழிபாட்டிற்கு அவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள்.
இந்த வேல் வழிபாட்டை நாம் முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் செய்வது என்பது சிறப்பு. ஒரு குறிப்பிட்ட வேண்டுதலை முன்வைத்து 48 நாட்கள் தொடர்ச்சியாக இந்த வழிபாட்டை செய்யலாம் அல்லது செவ்வாய்க்கிழமை தோறும், சஷ்டி தினத்தில், கிருத்திகை நட்சத்திரத்தில் செய்யலாம்.
எந்த நாளில் நாம் செய்வதாக இருந்தாலும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யும்பொழுது அந்த வழிபாட்டிற்கு அதீத சக்தி உண்டாகும். இதற்கு நம்முடைய உள்ளங்கை அளவிற்கு ஒரு வேலை வாங்கிக் கொள்ள வேண்டும். வேலுக்கு தங்களால் இயன்ற அபிஷேகங்களை செய்யலாம். எதையும் செய்ய இயலாது என்னும் பட்சத்தில் வெறும் தண்ணீரை மட்டும் ஊற்றி அபிஷேகம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கூட இந்த வழிபாட்டை செய்யலாம்.
அபிஷேகம் செய்து முடித்த பிறகு சந்தனம் குங்குமம் வைத்துவிட்டு வேலிற்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக வெற்றிலை பாக்கு வாழைப்பழத்தை வைத்துக் கொள்ளலாம். பிறகு முருகப் பெருமானின் அஷ்டோத்திரத்தை கூறியபடி அரளிப் பூவால் வேலிற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.
ஒரு குறிப்பிட்ட வேண்டுதலை முன்வைத்து தொடர்ச்சியாக 48 நாட்கள் வேல்வழிபாட்டை செய்பவர்கள் 48 நாட்கள் நிறைவடைந்த பிறகு அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று தங்களுடைய பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்து கொள்ள வேண்டும். வேண்டுதல் நிறைவேறிய பிறகு வேலை முருகன் வீற்றிருக்கும் ஆலயத்தில் இருக்கும் உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.




