கோலாலம்பூர், பிப்ரவரி 5:
மலேசியத் தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்து டேலண்ட் கார்ப்பரேஷன் மலேசியா (TalentCorp) நடத்திய ஆய்வின் முடிவுகளை அமைச்சர் ஆர். ரமணன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்த ஆய்வு 18 துறைகளில் உள்ள 5.6 மில்லியன் தொழிலாளர்களை உள்ளடக்கியது. இதில் 12 சதவீதத்தினர் (685,000 பேர்) நேரடியாகப் பாதிக்கப்படுவர் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக பாதிப்பைச் சந்திக்கக் கூடிய 5 முக்கியத் துறைகளாக, மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம்: 2,45,000 வேலைகள், உணவு உற்பத்தி சேவைகள்: 2,03,000 வேலைகள், உலகளாவிய வணிகச் சேவைகள் (GBS): 89,000 வேலைகள், மின்சாரம் மற்றும் மின்னணுவியல் (E&E): 37,000 வேலைகள், சுற்றுலாத் துறை: 33,000 வேலைகள் என்பன அடங்கும்.
மேலும் பழைய வேலைகள் மறைந்தாலும், தொழில்நுட்பம் சார்ந்த 101 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என இந்த ஆய்வு கூறுகிறது. அவற்றில் AI ஆர்கிடெக்ட், தரவு விஞ்ஞானி (Data Scientist), இணையப் பாதுகாப்பு ஆய்வாளர் போன்ற AI மற்றும் டிஜிட்டல் சார்ந்த (68%) வேலைகள், பசுமைப் பொருளாதாரம் (19%): நிலைத்தன்மை நிபுணர் (Sustainability Expert), ஆற்றல் பொருளாதார நிபுணர், புதிய தொழில்நுட்பங்கள் (13%): ரோபாட்டிக்ஸ் ஆபரேட்டர்கள், தன்னாட்சி அமைப்பு நுட்ப வல்லுநர்கள் ஆகிய துறைகளில் வேலை வாய்ப்பு உருவாகும் என்றார்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் மலேசியர்கள் தங்களது வேலைகளை இழக்காமல் இருக்க, அவர்களுக்குப் புதிய திறன்களைக் கற்றுத் தருவதற்கும் (Upskilling and Reskilling), ஏற்கனவே உள்ள திறன்களை மேம்படுத்துவதற்கும் அரசு முன்னுரிமை அளித்து வருவதாக அமைச்சர் ரமணன் உறுதி அளித்தார். இதற்காக ‘Jelajah AI MyMahir’ போன்ற திட்டங்கள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
The post வேலைவாய்ப்பில் AI-ன் தாக்கம்: மலேசியாவில் 6.85 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் அபாயம்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

