International
oi-Halley Karthik
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பல்லாயிரக்கணக்கான வங்தேச குடிமக்களின் விசாக்களை ரத்து செய்திருக்கிறது. இதனால் அங்கு வேலை பார்த்து வந்த ஏராளமான வெளிநாட்டு ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த திடீர் விசா அறிவிப்பு ரத்து காரணமாக, விடுமுறைக்கு சொந்த நாட்டுக்கு சென்றிருந்த வந்தேசத்தினர் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகம் திரும்ப முடியாமல் இருக்கின்றனர்.

விசாக்கள் ஏன் ரத்து செய்யப்பட்டன என்பது குறித்து அதிகாரப்பூர்வமான நேரடி காரணங்களை அமீரக அரசு இன்னும் தெளிவாக வெளியிடவில்லை. இருப்பினும் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் அமைச்சக வட்டாரங்கள் சில முக்கிய காரணங்களை சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர ராணுவ மோதல்கள் மற்றும் பாதுகாப்பு சூழல் காரணமாக அமீரக அரசு வெளிநாட்டினருக்கான பாதுகாப்பு கண்காணிப்பை கடுமையாக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்களின் சமூக ஊடக பக்கங்களில் அரசியல் ரீதியான கருத்துக்களையோ அல்லது வதந்திகளையோ ஷேர் செய்வது அமீரகத்தின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டு அதன் அடிப்படையில் விசாக்கள் தானாகவே ரத்து செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.
அதேபோல எக்ஸ்பயரி ஆன விசாக்களை புதுப்பிக்காமல் இருந்தது, போலியான ஆவணங்கள் அல்லது ஸ்பான்சர்களின் வர்த்தக உரிமங்களில் உள்ள சிக்கல்கள் போன்ற உள்கட்டமைப்பு சார்ந்த விதிகள் தற்போது மிக தீவிரமாக மறுஆய்வு செய்யப்படுகின்றன. பலரும் தங்களின் விசா ரத்து செய்யப்பட்டிருப்பதை எஸ்எம்எஸ் மற்றும் மெயில் மூலமாகவே தெரிந்துக்கொண்டிருக்கின்றனர்.
சுமார் 27 ஆண்டுகளாக அமீரகத்தில் தங்கி 2 சொந்த தொழில்களை நடத்தி வந்த அபுல் கலாம் ஆசாத் போன்ற பல மூத்த வணிகர்களும் தங்களின் முதலீடுகள் மற்றும் குடும்பங்களை துபாயில் விட்டுவிட்டு சொந்த நாட்டில் முடங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
இந்த விவகாரம் வங்கதேசத்தில் பெரும் புயலை கிளப்பியிருப்பதால் அந்நாட்டின் இடைக்கால அரசு மற்றும் வெளிநாட்டு தூதரகம் இதில் உடனடியாக தலையிட்டிருக்கின்றன. எந்தவித சட்ட விதிகளையும் மீறாத அப்பாவிகளின் விசாக்களை மீண்டும் பரிசீலிக்குமாறு அமீரக அரசிடம் தூதரக ரீதியாக கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

