Last Updated:
மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் நாடுகளில் வேலைக்குச் சென்ற இந்திய இளைஞர்கள் சீன சைபர் மாபியா கும்பலிடம் சிக்கி மோசடியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தெற்காசிய நாடுகளில் வேலைக்கு சென்ற இந்திய இளைஞர்கள் அங்குள்ள சீன நாட்டை சேர்ந்த சைபர் மாபியா கும்பலிடம் சிக்கி, மோசடி செயல்களை அரங்கேற்ற வற்புறுத்தப்பட்டுள்ளனர். படித்த படிப்புக்கு வேலை எனக்கூறி அழைத்து சென்று சைபர் மோசடியில் ஈடுபட வைத்த அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?
வாட்ஸ்-ஆப், இன்ஸ்டா கிராம், டெலி கிராம் போன்ற செல்போன் செயலிகள் மற்றும் ஏஜென்ட்கள் மூலம் தெற்காசிய நாடுகளில் வேலைக்கு சென்ற இளைஞர்கள் அங்குள்ள சீன நாட்டைச் சேர்ந்த சைபர் மாபியா கும்பலிடம், வசமாக சிக்கி உள்ளனர். கால் சென்டர் வேலை, இன்ஸ்சூரன்ஸ் Verification என்ற பெயரில் இந்தியர்களை ஏமாற்றி கணினி முன் உட்கார வைத்தவர்கள், தாங்கள் கொடுக்கும் நபர்களின் வங்கி விவரங்களை பேசியே கறக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர். அதை டார்கெட் என்ற பெயரில், கொடுத்த நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என கூறி குற்றச்செயலில் ஈடுபட வைத்துள்ளனர்.
மேலும் பணியாற்றியவர்களுக்கு வங்கி கணக்கில் ஊதியம் கொடுக்காமல் கையில் பணமாகவும், மேலும் ஊழியர்களுக்கான எந்தவித அடையாளங்களும் இல்லாமல் மறைமுகவே அவர்களை வைத்திருந்தார்கள். இதனால் சீனர்களிடம் சிக்கிய இந்தியர்களுக்கு பெரும் சந்தேகம் உண்டானது. அனைவர்கள் அனைவரும் படித்த இளைஞர்கள். தெற்கு ஆசிய நாடுகளான மியான்மர், தாய்லாந்து, கம்போடியா மற்றும் லாவோஸுக்கு ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம் வரை செலவு செய்து மிகுந்த கனவுகளோடு சென்றவர்கள்.
முதலில் இந்தியாவில் இருந்து தாய்லாந்துக்கு சென்றவர்கள் அங்கு சீனா மாபியா கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஒரு கிடங்கில் அடைத்து வைத்திருந்து வற்புறுத்தி பயிற்சி கொடுத்த மோசடி கும்பல் ஆபாச வலைவீசி அதில் சிக்கும் நபர்களிடமும் பணம் பறிக்க வைத்துள்ளனர். அதாவது அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இளம் பெண்களின் புகைப்படங்களுடன் கூடிய போலி கணக்குகளை தயார் செய்து, அவற்றை சமூக வலைதளங்களில் உலவ விட்டு, அதன் பின்னர், யார் இவர்களுடன் நட்பு வைத்துக்கொள்ள விரும்புகிறார்களோ அவர்களிடம் ‘சாட்’ செய்து அவர்களை இவர்களின் வலையில் விழ வைக்க வேண்டும் என ஆர்டர் போட்டு சித்ரவதை செய்துள்ளனர்.
பின்னர் அப்படி சிக்குபவர்களிடம் 500 டாலர்கள் முதல் ஆயிரக்கணக்கான டாலர்களை வரை கறக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து மோசடி செய்ய வைத்துள்ளனர். அதில் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானவர்கள், இந்தியாவில் உள்ள தங்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தகவல் கொடுக்க, அந்த தகவல் மத்திய அரசுக்கு சென்றது. பின்னர் ஆந்திர போலீசாரின் உதவியுடன் மியான்மர் போலீசாரால் சைபர் கிரைம் மாபியா கும்பலிடம் சிக்கியவர்களை மீட்டு 3 தவணையாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
அதில் சமீபத்தில் ஆந்திராவை சேர்ந்த 120 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்தியர்கள் மட்டுமின்றி இலங்கை, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும் அங்கு சிக்கியுள்ளனர். இதில் இந்தியர்கள் மட்டுமே சுமார் 10,000-க்கும் அதிகமானவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
வேலைக்காக வெளிநாடு சென்றபோது மாய வலை.. சீன சைபர் மாபியா கும்பலிடம் சிக்கிய இந்தியர்கள்.. அடுத்து என்ன நடந்தது?


