Tamilnadu
oi-Vignesh Selvaraj
தருமபுரி: “வேட்டைக்காரன் வரான் ஓடு, ஓடு, ஓடு என விஜய் பாடினார். நீங்க தான் வேட்டைக்காரன் ஆச்சே. கர்நாடகாவை நோக்கி ஓட வேண்டியதுதானே, வேட்டையாடுங்கணே” எனப் பேசியுள்ளார் தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தருமபுரி மாவட்டம் பிலிகுண்டுவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் பேசுகையில், “காவிரி உரிமையை மீட்க முதலில் குரல் கொடுத்த இயக்கம் தேமுதிக. முதல் முறையாக தேமுதிக சார்பில் எம்.பி ஆன பிறகு நடக்கும் முதல் போராட்டம். ஒவ்வொரு தேர்தல் முடிந்த பிறகு என் பேச்சு, ஆர்ப்பாட்டத்தில் தான் தொடங்கும். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்த அனுபவமில்லாத ஆட்சி பற்றி பேசப்போகிறோம்.
காவிரி பிரச்சனையில் எத்தனை ஆட்சியாளர்கள் வந்தாங்க. எந்த மாற்றமும் இல்லை. ஆனால் மாற்றம் வேண்டும் என மக்கள் மாற்றத்தைக் கொடுத்தாங்க. ஆனால் இப்பவும் மாற்றம் இல்லை. ஏமாற்றம் தான். கர்நாடக முதல்வரும் புதுசு தான். ஆனால் அவர்களுக்கும் ஏமாற்றம் தான்.
கர்நாடக மக்கள் தண்ணீர் தராமல், செல்ஃபிஷாக (சுயநலத்தோடு) இருப்பதால், ஒகேனக்கல்லில் ஒரு ஃபிஷ்ஷும் இல்லை. காவிரியின் தொடக்கம் கர்நாடகாவாக இருந்தாலும், முடிவும் அதிக தொலைவு கடப்பதும் தமிழ்நாடு தான். இந்த உரிமை தமிழ்நாட்டுக்கு தான்.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் மிக்கப் பெரிய போராட்டம் நடத்தியது. நீட் தேர்வுக்கு போராட்டம் நடத்தும் காக்ரோச் ஜனதா கட்சி, தண்ணீருக்கு ஏன் போராட்டம் நடத்த வரவில்லை?
இன்று சென்னைக்கு வந்த ராகுல் காந்தி, பெங்களூரில் காங்கிரஸ் ஆட்சியமைக்க டிபன் சாப்பிடுகிறார். நீட்டுக்கு சட்டையை கிழித்துவிட்டு போராடுகிறார். ஆனால் தண்ணீருக்கு ஏன் வரவில்லை? திமுக போட்ட பிச்சையால், வெற்றி பெற்ற காங்கிரஸ், தவெக-வுடன் கூட்டணி. ஆனால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி தானே. நாம் முதலில் பாஜகவை கேட்பதை விட, காங்கிரஸ் கட்சியைத் தான் கேட்க வேண்டும்.
கடந்த திமுக ஆட்சியில் ஃபோட்டோசூட் நடத்துவதாக தவெகவும், விஜய்யும் சொன்னார்கள். இன்று கோட்டு சூட்டு, கண்ணாடி போட்டு ஆய்வு செய்கிறார். நானும் தான் கோட்டு சூட் போடுவேன். வேட்டைக்காரன் வரான் ஓடு, ஓடு, ஓடு, வேட்டைக்காரன் வாரான் பாரு என விஜய் பாடினார். நீங்க தான் வேட்டைக்காரன் ஆச்சே. கர்நாடகாவை நோக்கி ஓட வேண்டியதுதானே, நீங்க தானே வேட்டைக்காரன். வேட்டையாடுங்கணே.. ” எனப் பேசியுள்ளார் விஜயபிரபாகரன்.

