சிங்கப்பூரில் சுமார் 30 சதவீத லாரிகளில் இன்னமும் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்படவில்லை என்று காவல்துறை இன்று (நவம்பர் 24) தெரிவித்தது.
நவ.14 நிலவரப்படி, 2,525 லாரிகளில் 765 லாரிகளுக்கு இன்னும் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக கனம் கொண்ட லாரிகள், 2026 ஜனவரி 1க்குள் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை கட்டாயம் பொருத்த வேண்டும்.
2026 ஜனவரி 1 முதல், வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தாமல் சாலைகளில் பிடிபடும் லாரிகளுக்கு தடை விதிக்கப்படும்.
மேலும் அவற்றின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவாகும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதோடு மட்டுமல்லாமல், லாரிகளுக்கான சாலை வரியையும் புதுப்பிக்க இயலாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
3,501 கிலோ முதல் 5,000 கிலோ வரை அதிகபட்ச எடை கொண்ட புதிய லாரிகள் உட்பட அனைத்து லாரிகளிலும், வாகனம் மணிக்கு 60 கிமீ வேகத்திற்கு மேல் செல்ல அனுமதிக்காத வேகக் கட்டுப்பாடுகள் பொருத்தப்பட வேண்டும்.
அதிலும் 2018 ஜனவரி 1க்கு முன் பதிவு செய்யப்பட்ட லாரிகளில், அதிக கனம் கொண்ட லாரிகள் 2026 ஜனவரி 1க்குள் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை கட்டாயம் பொறுத்த வேண்டும்.
மேலும் எடை குறைவான லாரிகள் 2026 ஜூலை 1க்குள் அவ்வாறு செய்ய வேண்டும்.
2018 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட லாரிகளுக்கு இன்னும் ஒரு வருடம் அவகாசம் வழங்கப்படும்.
குறிப்பிட்ட காலக்கெடுக்குள், வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொறுத்தத் தவறுதல் அல்லது வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை அங்கீகரிக்கப்படாத வகையில் மாற்றங்களைச் செய்தல் ஆகியவற்றிற்கு அதிகபட்சமாக S$10,000 அபராதம் உயர்ந்துள்ளது.
ஜனவரி 1 முதல், லாரிகளில் வேக வரம்பை மீறி பிடிபடும் ஓட்டுநர்களின் நிறுவனங்களுக்கு “குறையை சரிசெய்யும் உத்தரவு” பிறப்பிக்கப்படும்.
இந்த உத்தரவின்படி, நிறுவனத்தில் உள்ள அனைத்து லாரிகளுக்கும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளை பொறுத்த வேண்டும். வழங்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே அது முடிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால், S$50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

