Last Updated:
தெருக்களில் விற்கப்படும் இத்தகைய உணவுப் பொருட்கள், பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இல்லாமல் இருக்கும் வகையிலான கடுமையான விதிமுறைகளை அரசு விதிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தெருவோர வியாபாரி ஒருவர் வெள்ளரிக்காய்களை விற்பனை செய்வதற்கு முன்பு அவற்றை தனது வாயில் வைத்து உமிழ்நீரால் நனைத்த காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்தக் காணொளி தெருவோர வியாபாரிகளிடையே தூய்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட வீடியோவின்கீழ் தெருக்களில் விற்கப்படும் இத்தகைய உணவுப் பொருட்கள், பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இல்லாமல் இருக்கும் வகையிலான கடுமையான விதிமுறைகளை அரசு விதிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது இன்னும் தெரியவரவில்லை. அக்டோபர் 10 ஆம் தேதி அன்று பகிரப்பட்ட இந்த வீடியோ, 6 லட்சம் பார்வையாளர்களைத் தாண்டியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த சுகாதாரமற்ற நடைமுறையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதில் பயனரொருவர், “காய்கறிகளை வாங்கிய பிறகு நன்கு கழுவுவது மிகவும் முக்கியம்” என்று கூறியுள்ளார். மற்றொருவர், “இதனால்தான் நான் வெளி உணவு சாப்பிடுவதில்லை” என்று கூறியுள்ளார். இன்னொரு பயணர், “அவர் சுத்தம் செய்யவில்லை, அதனால்தான் வெள்ளரிக்காயின் தோலை உமிழ்நீரால் பாலிஷ் செய்கிறார்” என்று கேலி செய்தார். இந்த வீடியோ பழையதாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் தற்போது வைரலாகி சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்களை பெற்றுவருகிறது.
இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதன்முறை அல்ல. சில நாட்களுக்கு முன்பு, உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து வந்த வேறொரு அதிர்ச்சியூட்டும் வீடியோவும் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த வீடியோவின்படி உள்ளூர் ஜூஸ் விற்பனையாளர் ஒருவர், தனது வண்டியின் அருகில் சுகாதாரமற்ற முறையில் தனது அந்தரங்க உறுப்புகளை சுத்தம் செய்யப் பயன்படுத்திய அதே துணியால் பழச்சாறு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களைத் துடைத்துக் கொண்டிருந்தார். இந்தச் செயலை நேரில் பார்த்த ஒரு பெண், அந்தக் காட்சிகளை கேமராவில் படம் பிடித்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ச்சியான இதுபோன்ற சம்பவங்கள், சாலையோரக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
October 21, 2025 8:11 AM IST


