Last Updated:
‘நில்ஸ்’ புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பிரான்ஸ் நாட்டின் பல்வேறு இடங்கள் தீவுகளாக காட்சி அளிக்கின்றன.
கடந்த வாரம் பிரான்ஸை நாட்டை நில்ஸ் ( (Storm Nils) புயல் கோர தாண்டவம் ஆடிச் சென்றது. புயல் கடந்தாலும், கனமழை இன்னும் குறையவில்லை. நாட்டின் முக்கிய ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் நகரங்களை சூழ்ந்துள்ளது. கரோன் (Garonne) மற்றும் மெய்ன் (Maine) ஆறுகளில் வெள்ளம் அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளது.
இதனால் கரோன் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அங்குள்ள லா ரியோல் (La Reole) மற்றும் காடிலாக் (Cadillac) போன்ற நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மார்மண்டே (Marmande) மற்றும் ஏஜன் (Agen) போன்ற பகுதிகளில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதால் வீடுகள், சாலைகள் தண்ணீரில் மூழ்கின. ஆற்றின் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால், மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
கிரோண்டே, லாட்-எட்-கரோன் மற்றும் மெய்ன்-எட்-லுவார் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மிக உயர்ந்த ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் வெள்ளம் காரணமாக சுமார் 2 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நியூ-அக்விடைன் மற்றும் ஆக்சிட்னி ஆகிய பிராந்தியங்களில் சுமார் 9 லட்சம் வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 400 செல்போன் கோபுரங்கள் செயலிழந்ததால் தகவல் தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளது. 70 க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு பல்வேறு நிலைகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
தலைநகர் பாரிஸில் ஓடும் செயின் (Seine) ஆற்றின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளன. வீடுகள், வணிகக் கூடங்கள், பெட்ரோல் பங்குகள் என அனைத்திலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போனது. பிரான்ஸ் சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


