Last Updated:
இஸ்ரேல் ஹமாஸ் அமைதி ஒப்பந்தத்தில், காசா முனையில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறி, பணயக்கைதிகள் விடுவிப்பு, பாலஸ்தீன மக்கள் திரும்புதல், நிவாரணம் வழங்குதல் தொடங்கியது.
அமைதி ஒப்பந்தத்தின்படி, காசா முனையில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறத் தொடங்கியது.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் நிறுத்தம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள பணயக்கைதிகள் மற்றும் இஸ்ரேல் சிறையில் உள்ள சுமார் இரண்டாயிரம் பாலஸ்தீனியர்களை விடுவிப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
காசா பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைகளை இஸ்ரேல் திரும்பப் பெறும் நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைப் பகுதியில் இருந்து படைகள் முழுவதையும் திரும்பப் பெற்றுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதேநேரம், அடுத்தகட்ட அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை தெற்கு காசா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
பணயக்கைதிகள் விடுவிப்பு, காசாவில் உள்ள படைகளை இஸ்ரேல் திரும்பப் பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடங்கியதால் பாலஸ்தீன மக்கள் மீண்டும் காசாவுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். வெள்ளிக்கிழமையன்று மட்டும் சுமார் இரண்டு லட்சம் பேர் தாயகம் திரும்பியதாகக் கூறப்படுகிறது. பசி, பட்டினியால் வாடும் காசா மக்களுக்காக நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
October 11, 2025 6:14 PM IST


