தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் நன்கொடை அளித்த நிறுவனங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக பாஜக ஆறாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி பெற்றிருக்கும் நிலையில், லாட்டரி அதிபர் மார்ட்டின் ஆயிரத்து 300 கோடி ரூபாயை வாரி வழங்கியுள்ளார்.
அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் நடைமுறையை மத்திய அரசு 2018ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இந்நிலையில், தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அதன் மூலம் பெறப்பட்ட நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் அந்த தகவல்களை இன்று மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் கெடு விதித்திருந்தது.
’தேர்தல் பத்திர விவரங்கள் வெளியானது’
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் காலக்கெடுவுக்கு முன்பே தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் நேற்று தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில், 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 1 லட்சம், 10 லட்சம் மற்றும் ஒரு கோடி ஆகிய மதிப்புள்ள பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பெயர்கள், நிதியை பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் பெறப்பட்ட தொகை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
’நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகள்’
அதன்படி தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து ரொக்கமாக பெற்ற கட்சிகளின் பட்டியலில் பாஜக, காங்கிரஸ்,திமுக, அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், பாரத் ராஷ்ட்ரிய சமிதி, தேசியவாத காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதாதளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
நன்கொடை வழங்கிய நிறுவனங்கள்
இதேபோல், அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்த நிறுவனங்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில், பாரதி ஏர்டெல், வேதாந்தா, முத்தூட், பஜாஜ், உத்தராகண்ட் சுரங்க பணிகளை மேற்கொண்ட நவ யுகா, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், பிரமல் எண்டர்பிரைசஸ், டிஎல்எஃப் கமர்ஷியல் டெவலப்பர்ஸ், பிவிஆர், சன் பார்மா, நாட்கோ பார்மா, ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
கோடிகளில் நன்கொடை வழங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டின்
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வாரி இறைத்தவர்களின் பட்டியலில் கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் ”பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ்” நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. அந்நிறுவனம் ஆயிரத்து 368 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. மேகா இன்ஜினியரிங் நிறுவனம் 966 கோடி ரூபாயும், Qwik Supply Chain நிறுவனம் 410 கோடி ரூபாயும் வழங்கியுள்ளன. ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தா 400 கோடி ரூபாயும், ஹால்டியா எனர்ஜி நிறுவனம் 377 கோடி ரூபாயும், பாரதி ஏர்டெல் நிறுவனம் 247 கோடி ரூபாயும் நிதி வழங்கியுள்ளன.
நன்கொடை வழங்கிய பாகிஸ்தான் நிறுவனம்
பாகிஸ்தானின் மின்சார உற்பத்தி நிறுவனமான ”ஹப் பவர்” என்ற நிறுவனமும் இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு நான்கு நாட்கள் கழித்து இந்த நிறுவனம் நன்கொடை வழங்கியிருப்பதாக தேர்தல் பத்திர ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேதி வாரியாக எந்தெந்த நிறுவனங்கள், தனிநபர்கள் பத்திரங்களை வாங்கினார்கள், எந்தெந்த தேதியில் பத்திரங்களை வங்கியில் கொடுத்து அரசியல் கட்சிகள் ரொக்கமாக மாற்றினார்கள் என்ற விவரங்கள் மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது. யார் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகை நன்கொடையாக வழங்கினார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
“ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி”
இந்நிலையில், தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருப்பது ஜனநாயகம் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு கிடைத்த வெற்றி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வரவேற்பு தெரிவித்துள்ளார். லாட்டரி அதிபர் மார்ட்டின் ஆயிரத்து 368 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் 2022 மற்றும் 23ஆம் ஆண்டுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில், அதன்பின் என்ன நடந்தது என்பதற்கு பதில் வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ரூ.6,060.5 கோடி நன்கொடை பெற்ற பாஜக
தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி பெற்ற கட்சிகள் பட்டியலில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி பாஜக 6 ஆயிரத்து 60 கோடியே 50 லட்சம் ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் ஆயிரத்து 609 கோடி ரூபாயும், காங்கிரஸ் கட்சி ஆயிரத்து 421 கோடி ரூபாயும் நன்கொடை பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் ஆளும் திமுகவுக்கு 648 தேர்தல் பத்திரங்கள் மூலம் 639 கோடி ரூபாய் நிதி வந்துள்ளது. அதேசமயம் அதிமுக 6 கோடியே 5 லட்சம் ரூபாய் மட்டும் நன்கொடையாக பெற்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…