இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “இந்தியாவில் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்படுவதை உலகம் அங்கீகரிக்கிறது.
எனவேதான், 30 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, உலகின் 37 ஜனநாயக நாடுகளின் குழு, ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத்திற்கு தலைமை வகிக்க இந்தியாவை அழைத்துள்ளது. இது இந்திய குடிமக்களுக்கும் அனைத்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும் மிகுந்த பெருமை சேர்க்கும் தருணம்” எனத் தெரிவித்துள்ளார்.
#WATCH | Delhi | Chief Election Commissioner Gyanesh Kumar says, “The world recognises the successful conduct of free, fair and transparent elections in India. Therefore, for the first time in its history of 30 years, the group of 37 democratic countries of the world have… pic.twitter.com/JlKBDCDacX
— ANI (@ANI) December 1, 2025
முன்னதாக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளன. குறிப்பாக தேர்தல் ஆணையம், ஆளும் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது.
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களிலும், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்து செயல்பட்டு வருகிறது. இதற்கும் பல்வேறு எதிர்க்கட்சிகள் தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் உலகின் 37 ஜனநாயக நாடுகளின் குழு, ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத்திற்கு தலைமை வகிக்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

