உள்ளூர் சுகாதாரத் திறமையாளர்களை வெளிநாட்டு நிறுவனங்கள் பணியமர்த்துவதை மலேசியாவால் தடுக்க முடியாது, ஏனெனில் அவ்வாறு செய்வதற்கு எந்தச் சட்டப்பூர்வ அடிப்படையும் இல்லை என்று சுகாதார அமைச்சர் சுல்கேப்லி அகமது கூறினார்.
இருப்பினும், மலேசியாவின் பொது சுகாதார அமைப்பிற்குள் மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
உள்ளூர் சுகாதாரப் பணியாளர்களை நிரந்தரமாகப் பணியில் அமர்த்துவதை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருவதாகவும், ஒப்பந்த மருத்துவர்களிடையே நிரந்தர நியமனங்களை விரைவுபடுத்துவதாகவும் சுல்கேப்லி மேலும் கூறினார்.
“எல்லை தாண்டிய ஆட்சேர்ப்பை நாங்கள் தடுக்க முடியாது, அது ஒரு தனிநபர் உரிமை. இது பரஸ்பர அங்கீகார ஏற்பாடு மற்றும் சேவைகள்மீதான ஆசியான் கட்டமைப்பு ஒப்பந்தத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது”.
“இந்த ஒப்பந்தங்கள் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்டபடி ஆசியான் நாடுகளில் தொழிலாளர் இயக்கத்தை அனுமதிக்கின்றன. இருப்பினும், அடிப்படைப் பயிற்சிக்குப் பிறகு எங்கள் மருத்துவர்கள், நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் எங்களுடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் இன்று கூறியதாகப் பெர்னாமா தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் மருத்துவமனைகள் உள்ளூர் பொது சுகாதாரப் பணியாளர்களை, குறிப்பாக மருத்துவர்களை, கவர்ச்சிகரமான சம்பள சலுகைகளுடன் தீவிரமாக ஆட்சேர்ப்பு செய்கின்றன என்ற வைரலான சமூக ஊடகக் கூற்றுகளுக்குச் சுல்கேப்லி பதிலளித்தார்.
இந்த ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூரில் பணிபுரிய மலேசிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்களுக்கான வேலை விளம்பரங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
வியாழக்கிழமை, டிஏபி செனட்டர் டாக்டர் ஏ லிங்கேஸ்வரன், சிங்கப்பூர் மலேசிய மருத்துவர்களை ஆக்ரோஷமாக ஆட்சேர்ப்பு செய்வதை கண்டித்து, அவசர சீர்திருத்தங்கள் செய்யப்படாவிட்டால் மலேசியா திறமைசாலிகள் வெளியேறும் அபாயத்தை எதிர்கொள்கிறது என்று எச்சரித்தார்.
ஒப்பந்த அடிப்படையில் பணிமாற்றம் செய்யும் மருத்துவர்கள்
நாட்டின் மருத்துவ நிபுணர்களுக்கான முக்கியமான தேவையைக் கருத்தில் கொண்டு, ஒப்பந்த மருத்துவர்களை நிரந்தரப் பதவிகளுக்கு மாற்றுவதை அமைச்சகம் விரைவுபடுத்தி வருவதாகச் சுல்கேப்லி கூறினார்.
“நாங்கள் தாமதிக்கமாட்டோம்; ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப் பணிகளில் ஈடுபடுத்தும் செயல்முறையை நாங்கள் விரைவுபடுத்துகிறோம். காலியிடங்கள் ஏற்பட்டவுடன், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த பத்தாண்டுகளில் மருத்துவ பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும், நிரந்தரப் பணியிடங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதையும் நிவர்த்தி செய்வதற்காகவே ஒப்பந்த மருத்துவர் முறை ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்று அமைச்சர் விளக்கினார்.
“மருத்துவ பட்டதாரிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டதால் அந்த நிலைமை இனி பொருந்தாது. புதிய நிரந்தர நியமனங்களுக்கு இப்போது போதுமான பதவிகள் இருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.