கோலாலம்பூர்:
வெளிநாட்டு ஓட்டுநர் உரிமங்கள் அனைத்தும் மலேசிய ஓட்டுநர் உரிமமாக மாற்றும் நடைமுறை மே 19ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் நிறுத்தப்படுவதாக மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குநர் ஏடி ஃபாட்லி ராம்லி அறிவித்து உள்ளார்.
உள்ளூர் ஓட்டுநர் உரிமம் தேவைப்படுவோர் இனிமேல், மலேசியர்கள் பின்பற்றும் அதே நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் இன்று (மே 16) வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
வெளிநாட்டினருக்கான சாலைப் பாதுகாப்புத் தரநிலையை மேம்படுத்தும் சாலைப் போக்குவரத்துத் துறையின் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஓட்டுநர் உரிம மாற்றம் நிறுத்தப்படுவதாக ஏடி ஃபாட்டிலி கூறியுள்ளார்.
இருப்பினும், ஒருசிலருக்கு அதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
குறிப்பாக, 12 மாதங்களுக்கும் குறைவாக மலேசியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினருக்கு இந்த விதிவிலக்கு பொருந்தும்.
அதேபோல, ஆசியான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவர்களின் நாட்டில் அளிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை மலேசியாவில் பயன்படுத்தத் தடை இல்லை.
ஆசியான் நாடுகளால் வழங்கப்பட்ட உள்நாட்டு ஓட்டுநர் உரிமங்களை அங்கீகரிப்பது தொடர்பான 1985ஆம் ஆண்டின் உடன்பாட்டின்கீழ் அவர்களுக்கு அந்தச் சலுகை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


