Last Updated:
வெளிநாட்டிற்கு சென்று உயர்கல்வி படிக்க வேண்டும் என்பது பல இந்திய மாணவர்களுக்கு ஒரு கனவாக மாறி வருகிறது.
அதிகரித்து வரும் கல்விச் செலவு நாட்டிற்குள்ளும் அல்லது வெளிநாடுகளில் கல்வி பயில்வோரைக் கொண்ட இந்தியக் குடும்பங்களின் வரவு செலவுத் திட்டங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து தனது எக்ஸ் போஸ்ட்டில் சில தகவல்களை பிரபல சிஏ அதிகாரி கௌசிக் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவரது சமீபத்திய போஸ்ட் வெளிநாட்டுக் கல்விக்கான செலவினங்களில் ஏற்பட்டுள்ள கடுமையான அதிகரிப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு (2013–14), இந்தியக் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்ப சுமார் ரூ.2,429 கோடி செலவிட்டுள்ளன. ஆனால், தற்போது 2023 – 2024-ஆம் ஆண்டு காலகட்டத்தில் இதே செலவானது ரூ.29,000 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது வெறும் பத்தாண்டுகளில் 12 மடங்கு அதிகரித்துள்ளது.
அதிகம் அறியப்படாத, ஆனால் குறிப்பிடத்தக்க ஒரு பிரச்சனையையும் தனது போஸ்ட்டில் கௌசிக் சுட்டிக் காட்டியுள்ளார். அது என்னவென்றால் கல்விக்காக வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதில் உள்ள மறைமுகச் செலவுகள். இதில் வங்கிக் கட்டணங்கள் மற்றும் கரன்சி எக்ஸ்சேஞ்ச் விகிதங்கள் ஆகியவை அடங்கும். இவை பெரும்பாலும் பல குடும்பங்களால் கவனிக்கப்படாமல் போகின்றன. ஆனால் இதில் தான் ஒரு பெரிய விஷயம் அடங்கி இருக்கிறது. “2024-ஆம் ஆண்டில் மட்டும், ரூ.1,700 கோடிக்கு மேல் மறைமுக வங்கிக் கட்டணங்கள் மற்றும் கரன்சி எக்ஸ்சேஞ்ச் மார்க்கப்ஸ்களுக்கு செலவழிக்கப்பட்டு உள்ளன. ஒருவேளை இதுபோன்ற மறைமுகக் கட்டணங்கள் இல்லாவிட்டால் அந்தப் பணம் வெளிநாடுகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் மாத வாடகை, கூடுதல் படிப்புச் செலவுகள் அல்லது ஒரு செமஸ்டர் கல்விக் கட்டணத்திற்கு கூட உதவியாக இருந்திருக்கலாம். அந்தப் பணம் மாணவர்களுக்கு செல்லாமலேயே போய்விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கான செலவினங்களின் அதிகரிப்பு முக்கியமாக 3 காரணங்களால் ஏற்படுவதாகவும் கூறுகிறார்.
- வழக்கத்திற்கு மாறாக முன்பை விட அதிக மாணவர்கள் வெளிநாட்டில் படிக்கும் விருப்பத்தைத் தேர்வு செய்கிறார்கள்
- பிற நாடுகளில் கல்வி கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் முன் இருந்ததை விட கணிசமாக அதிகரித்துள்ளன
- வங்கிகளும் பணப் பரிமாற்ற சேவை மையங்களும் நாணய மாற்றம் மற்றும் சர்வதேசப் பரிமாற்றங்களுக்கு அதிக கட்டணங்களை அமைதியாக வசூலிக்கின்றன
வெளிநாட்டிற்கு சென்று உயர்கல்வி படிக்க வேண்டும் என்பது பல இந்திய மாணவர்களுக்கு ஒரு கனவாக மாறி வருகிறது. ஆனால் பெரும்பாலும் இதற்கான செலவுகள் கண்ணுக்குத் தெரியாத படியும் உள்ளது. வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே நேரம், இதனால் அவர்களது குடும்பங்களில் நிதிச் சுமை கணிசமாக அதிகரித்து வருகிறது. மறைமுக வங்கிக் கட்டணங்கள் முதல் அதிக பரிமாற்றக் கட்டணங்கள் வரை, பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கல்வி கனவை ஆதரிப்பதற்காக, அமைதியான வரியைப் போல உணரும் தொகையை கிராமத்திலும் செலுத்துகிறார்கள்.
வெளிப்படையான கட்டண முறைகள் மற்றும் சிறந்த, குறைந்த விலை போன்றவை நடைமுறைக்கு வரும் வரை, இந்த “அமைதியான வரி” வெளிநாடுகளுக்கு எளிதில் சென்று கல்வி கற்கும் வசதியை படைத்தவர்களுக்கும், வெளிநாட்டு கல்விக்காக பொருளாதார ரீதியாக போராடுபவர்களுக்குமான இடைவெளியை விரிவுபடுத்தும் என்றும் கூறி உள்ளார்.
August 28, 2025 7:52 AM IST
வெளிநாட்டில் கல்வி… இந்திய குடும்பங்கள் செலவழிக்கும் தொகை 10 ஆண்டுகளில் கிடுகிடு உயர்வு..!


