Last Updated:
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பதௌலி கிராமத்தைச் சேர்ந்தவர் 38 வயதான நவுஷாத் அகமது. இவரது மனைவி ரஜியா. நவுஷாத் அகமது துபாயில் வேலைப் பார்த்து வந்தார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் மற்றொரு மீரட் சம்பவம் அரங்கேறியிருப்பது, அம்மாநில மக்களை குலைநடுங்க வைத்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்த கணவனை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வீசிய கொடூரம் அரங்கேறியுள்ளது. திட்டம் போட்டு தீர்த்துக் கட்டிய மனைவியை சூட்கேஸ் காட்டிக் கொடுத்தது எப்படி?
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த மாதம் வெளிநாட்டில் இருந்து வந்த கணவனை, கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்து டிரம்மில் உடலை போட்டு சிமெண்ட் வைத்து அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் நாட்டையே அச்சத்தில் நடுநடுங்க வைத்தது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் அதேபோன்று வெளிநாட்டில் இருந்து வந்த கணவனை மனைவி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்து சூட்கேசில் அடைத்து வீசிச் சென்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பதௌலி கிராமத்தைச் சேர்ந்தவர் 38 வயதான நவுஷாத் அகமது. இவரது மனைவி ரஜியா. நவுஷாத் அகமது துபாயில் வேலைப் பார்த்து வந்தார். 10 நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நவுஷாத் அகமது துபாயில் இருந்த போது ரஜியாவுக்கு, ரூமான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், கணவர் ஊர் திரும்பியதால் அவர்களது காதலுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவனை தீர்த்துக்கட்ட காதலனுடன் சேர்ந்து ரஜியா திட்டம் தீட்டியுள்ளார்.
இந்த திட்டத்திற்கு காதலன் ரூமானின் நண்பர் ஹிமான்ஷு என்பவர் உதவுவதாக தெரிவித்துள்ளார். இந்த மூன்று பேரும் சேர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நவுஷாத் அகமதுவை கொலை செய்துள்ளனர். உடலை மறைக்க நினைத்த அவர்கள் இரண்டு துண்டாக வெட்டி கணவன் வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்திருந்த சூட்கேசிலேயே திணித்துள்ளனர். பின்னர் அந்த சூட்கேஸை 55 கி.மீ. தூக்கிச் சென்று பட்கவுலி என்ற கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் வீசிவிட்டு வந்துள்ளனர்.
அந்த நிலத்தின் விவசாயி மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்த போது சூட்கேஸ் ஒன்று தனியாகக் கிடப்பதைப் பார்த்து அரண்டு போனார். உடனே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்த போது இரண்டு துண்டுகளாக கிடந்த உடலைப் பார்த்து மிரண்டு போயினர். வெளிநாட்டில் இருந்து வரும்போது அந்த சூட்கேஸில் விமானம் பயணம் தொடர்பான டேக் ஒட்டப்பட்டிருந்தது. அந்த டேக்கை வைத்து நவுஷாத் அகமது வீட்டை அடையாளம் கண்ட போலீசார், மனைவி ரஜியாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
முதலில் தனது கணவரை, சனிக்கிழமை இரவு முதல் காணவில்லை எனக் கூறி சாதித்துள்ளார் ரஜியா. பின்னர் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையில் கணவரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். வெளிநாட்டில் இருந்து வந்த கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவியே கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Meerut,Meerut,Uttar Pradesh
April 22, 2025 2:32 PM IST
வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த அதே சூட்கேஸில் சடலமாக அடைக்கப்பட்ட நபர்.. உ.பி-யில் மீண்டும் ஒரு மீரட் சம்பவம்!


