2023 ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை முதல் 2025 சாம்பியன்ஸ் டிராபி வரை இந்திய அணி கடைசி மூன்று ஐசிசி தொடர்களில் மொத்தம் 24 போட்டிகளில் 23-ல் வென்று சாதனை படைத்துள்ளது. 2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்காமல் இருந்திருந்தால் ஐசிசி தொடர்களில் இந்தக் காலக்கட்டத்தில் அனைத்துப் போட்டிகளிலும் வென்ற பெரும் சாதனையை இந்திய அணி நிகழ்த்தியிருக்கும்.
2023 உலகக் கோப்பையில் 10 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று கடைசியில் இறுதிப் போட்டியில் மண்ணைக் கவ்வியது. 2024 டி20 உலகக் கோப்பை, மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அனைத்துப் போட்டிகளிலும் வென்று உலக டி20 சாம்பியனாகவும் இப்போது சாம்பியன்ஸ் டிராபி சாம்பியனாகவும் உயர்வு பெற்றுள்ளது.
2010-ல் ஆஸ்திரேலியாவும் 2014-ல் இந்தியாவும் 3 ஐசிசி தொடர்களைத் தொடர்ந்து கைப்பற்றும் நிலைக்கு வந்தன. ஆனால் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் இதை அப்போது சாதிக்க முடியவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் அணி அதன் உச்சத்தில் இருந்தபோது 1975, 79, 83 உலகக் கோப்பைகளில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தக் காலக்கட்டங்களில் 17 போட்டிகளில் 15 போட்டிகளில் மே.இ.தீவுகள் வென்றது. 1975-லும், 1979-லும் உலகக் கோப்பையை வென்றது மே.இ.தீவுகள், ஆனால் 1983-ல் மூன்று முறை இந்தியாவுடன் மோதியதில் முதல் போட்டியிலும் இறுதியிலும் மே.இ.தீவுகள் தோற்றது.
ஆனால், ஆஸ்திரேலிய அணி 1999, 2003, 2007 உலகக் கோப்பைகளை வென்று ஹாட்ரிக் சாதனை புரிந்தது. இடையில் 2006 – சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றது ஆஸ்திரேலியா. 2003 மற்றும் 2007 உலகக் கோப்பைப் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட ஆஸ்திரேலியா தோற்கவில்லை. அந்த 8 ஆண்டுகளில் ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலியா 44 போட்டிகளில் 37-ல் வென்று 6ல் தோற்றிருந்தது.
அந்த விதத்தில் ரிக்கி பான்டிங் ஒரு அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். கேப்டனாக அந்த ஆதிக்க 8 ஆண்டுகளில் 5 ஐசிசி தொடர்களில் ஆஸி. கேப்டனாக ரிக்கி பான்டிங் இருந்தார். இதில் 2 உலகக் கோப்பைகள், ஒரு சாம்பியன்ஸ் டிராபியை அவர் தலைமையில் வென்றதோடு 33 போட்டிகளில் 30-ல் வென்று வெறும் 3-ல் மட்டுமே தோற்றுள்ளார் என்பது மிகப் பெரிய கேப்டன்சிக்கான உதாரணம்.
இப்போது ரோஹித் சர்மா கேப்டனாக ஐசிசி தொடர்களில் 27 வெற்றி, 3 தோல்விகளுடன் பான்டிங்கை நெருங்கி வருகிறார். இதில் நம்பர் 1 தோனிதான் ஐசிசி தொடர்களில் மொத்தம் 41 வெற்றிகளுடன் உள்ளார், பான்டிங் 40 வெற்றிகள்.
குறைந்தது 5 அணிகள் பங்கேற்கும் பெரிய சர்வதேச தொடர்களில் இம்ரான் கான் 4 தொடர்களை கேப்டனாக வென்றுள்ளார். ரிக்கி பான்டிங், தோனி, ரோஹித் சர்மா ஆகியோரும் 4 பெரிய சர்வதேச தொடர்களைக் கேப்டனாக வென்றுள்ளனர்.
இந்திய அணியின் தற்போதைய ஆதிக்க வெற்றிகளுக்குக் காரணம், அட்டாக்கிங் பேட்டிங் மற்றும் சூழ்நிலைக்கேற்றவாறான பவுலிங் வரிசை. ரோஹித் கேப்டன்சியில் 26 இன்னிங்ஸ்களில் எதிரணியை 19 முறை அனைத்து விக்கெட்டுகளயும் இழக்கச் செய்திருக்கிறது இந்திய பவுலிங்.
எப்படி தோனி காலத்தில் சேவாக், சச்சின், கம்பீர், யுவராஜ் சிங், ரெய்னா ஆகியோர் பிரமாதமாக ஆடினார்களோ சமீப காலங்களில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஸ்ரேயஸ் அய்யர், ஷுப்மன் கில், கே.எல்.ராகுல்.
மேலும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கும் ஆச்சரியமான தகவல் என்னவெனில் ரோஹித் சர்மா 35 வயதான பிறகே ஸ்ட்ரைக் ரேட்டை கண்டபடி உயர்த்தியுள்ளார் என்பதே. 35 வயதிற்கு முன்பாக லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 89% ஆக இருந்தது இப்போது 117.37% ஆக உயர்ந்துள்ளது. ஆனால் வயதானாலும் ஹிட்மேனின் அதிரடி வேகம் எடுத்துள்ளது என்றாலும் அவர் 42 இன்னிங்ஸ்களில் 3 சதங்களையே எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.