கோலாலம்பூர், நவ.5-
சிம்பானான் எஸ்எஸ்பிஎன் (பிஎம்எஸ்) சேமிப்பு மாதம் 2025 திட்ட காலகட்டத்தில் மொத்தம் 222.29 மில்லியன் ரிங்கிட் வைப்பு தொகையைச் சேகரித்து, இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 220 மில்லியன் ரிங்கிட்டை மீறி 101.04 சதவீதம் வெற்றியைப் பெற்றுள்ளது.
சமூகத்தினரிடையே அபாரமான வரவேற்பைப் பெற்ற உயர் தாக்கம் கொண்ட திட்டம் இந்த பிஎம்எஸ் திட்டம் என்பதை இந்த வெற்றி நிரூபிப்பதாகக் தேசிய உயர் கல்வி நிதி கழகத்தின் (பிடிபிடிஎன்) தலைவர், டத்தோ ஸ்ரீ நோர்லிசா அப்துல் ரஹீம் கூறினார்.
சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து சமூக விழிப்புணர்வு அதிகரித்துள்ளதை இந்தச் சாதனை பிரதிபலிக்கிறதுஎன்று அவர் மேலும் கூறினார். பிள்ளைகளின் கல்விக்கான சேமிப்பு கலாச்சாரத்தை உருவாக்கும் பிடிபிடிஎன்னின் திட்டங்களுக்கு இந்த விழிப்புணர்வு சாதகமாக அமைந்திருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை இங்குள்ள சன்வே வேலாசிட்டி மாலில் நடைபெற்ற பிஎம்எஸ் 2025 நிறைவு கொண்டாட்டத்தில் பங்கேற்ற போது நோர்லிசா இவ்வாறு கூறினார். பிடிபிடிஎன் தலைமை செயல்முறை அதிகாரி அகமத் தசுக்கி அப்துல் மஜித், பிடிபிடிஎன் மேலாண்மை வாரிய உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த பிஎம்எஸ் சேமிப்பு மாதம் 2025 , பிடிபிடிஎன்னின் முக்கிய அடையாள திட்டமாகும், இது சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தை மையமாகக் கொண்டது, சிம்பான் எஸ்எஸ்பிஎன் மலேசிய சமூகத்தின் முதன்மை சேமிப்பு களமாக விளம்பரப்படுத்தும் முயற்சியாகும் இது.
2025 செப்டம்பர் 26 முதல் நவம்பர் 2 வரை நடைபெற்ற பிஎம்எஸ் நிகழ்ச்சி, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் உலக சேமிப்பு தினத்தையொட்டி நடத்தப்பட்டது. இத்திட்டம் 2018ஆம் ஆண்டு தொடங்கி, தற்போது எட்டாவது ஆண்டை எட்டியுள்ளது.
உங்கள் குழந்தையின் சூப்பர் ஹீரோவாக வாருங்கள் என்ற கருப்பொருளுடன் அமைந்த இந்தத் திட்டம் சவால்கள் , புதிய கண்டுபிடிப்புகளால் நிரம்பிய குழந்தைகளின் கல்விப் பயணத்தை படம் பிடித்து காட்டுவதாக அமைந்திருக்கிறது.
பெற்றோர்களும் குழந்தைகளும் பங்கேற்கும் வகையில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளும் இந்நிகழ்வினூடே ஏற்பாடு செய்யப்பட்டன. வண்ணப்போட்டி ,திறமையைக் காட்டும் போட்டி, பல்வேறு உடை அலங்காரப் போட்டி , ஜெங்கா குடும்பப் போட்டி நினைவுத் திறன் சவால் போட்டி, மர்மப் பெட்டி, இணையப் புதிர், வினாடி வினா, உரையாடல் நிகழ்ச்சி உள்ளிட்ட பல அங்கங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றன. குடும்பங்களில் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதையும், குழந்தைகளுடன் நேரத்தை மகிழ்ச்சியாகக் செலவிடுவதையும் ஊக்குவிப்பதற்காக இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த நிறைவுவிழாவில், Kad Debit-i Bank Islam Visa PTPTN கார்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. உள்ளூர் வெளிநாட்டு சில்லறை ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான ரொக்கம் திரும்பக் கிடைக்கும் சலுகையை இது வழங்குகிறது.
மேலும், பிஎம்எஸ் 2025 இன் முக்கிய மூலதன பங்குதாரர்களுக்கு பிடபிடிஎன் நிறுவனம் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கியது. கடந்த ஆண்டு நிகழ்ச்சியில் இடம்பெற்ற சேமிப்பை ஊக்குவிக்கும் இசை காணொலியும் இதில் திரையிடப்பட்டது.
மலேசிய மக்களுக்காக பல்வேறு சிறப்பு சலுகைகளையும் இந்தத் திட்டம் வழங்குகிறது. ஆண்டுக்கு அதிகபட்சமாக 8,000 ரிங்கிட் வரையிலான வருமான வரி தள்ளுபடி, வைப்பாளர்களுக்கான தகாஃபுல் (இஸ்லாமிய காப்பீடு) பாதுகாப்பு, தகுதியுடைய குடும்பத்திற்கு அதிகபட்சம் ரூ.10,000 வரை இலவசமான ஏற்புடைய மானியம் , போட்டி வட்டி விகிதம் , ஷரியா விதிகளுக்கு இணங்கும் சேமிப்பு, அரசாங்க உத்தரவாதத்துடன் கூடிய பாதுகாப்பான சேமிப்பு ஆகிய நன்மைகளைத் இந்தத் திட்டம் கொண்டிருக்கிறது. இது குறித்து மேலும் தகவல்கள் பெற, www.ptptn.gov.my என்ற அதிகாரப்பூர்வ தளத்திலும் அல்லது myPTPTN செயலியின் மூலமாகவும் தொடரபு கொண்டு எளிதாக, விரைவாக, பாதுகாப்பாக சேவைகளைப் பெறலாம்.




