இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30) மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காக நிசார் என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன.
இதற்கான ஒப்பந்தம் 2014 செப். 30-இல் கையொப்பமானது. அதன்பின்னர் இரு நாடுகளின் விஞ்ஞானிகள் கூட்டு முயற்சியில் சுமாா் ரூ. 12,000 கோடி மதிப்பிலான நிசார் செயற்கைக்கோளின் தயாரிப்புப் பணிகள் கடந்த ஆண்டு நிறைவு பெற்றன.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு கட்ட சோதனைகள் முடிவடைந்த நிலையில் நிசாா் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-ஆவது ஏவுதளத்திலிருந்து ஏவ திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில், ராக்கெட் ஏவுதலின் 27 மணி நேரம் 30 நிமிட கவுன்ட்டவுன் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், இன்று(புதன்கிழமை) மாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் புவியிலிருந்து 743 கி.மீ. தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது.