வெறும் 100 ரூபாயில் தொழில் தொடங்கி ரூ.2 கோடி வருமானம் ஈட்டும் பெண்! 50 லட்சம் கடனிலிருந்து தப்பித்தது எப்படி?
நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களும் நாம் நினைத்தபடியே நடக்கும் என்று சொல்லி விட முடியாது. திடீரென சில சோதனைகளும் ஏற்படும். ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து சாதிப்பவர்களே உண்மையான வெற்றியாளர்கள். அப்படி தனக்கு வந்த சோதனையை சாதனையாக மாற்றிய ஒரு பெண்மணியை பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.
தமிழ்நாட்டின் உசிலம்பட்டியில் பிறந்தவர் இளவரசி என்ற பெண்மணி. இவரும் இவருடைய குடும்பமும் 45 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் வசித்து வந்தனர். சிறு வயதிலிருந்தே தனது தாத்தா பாட்டி செய்யும் பலகாரங்களை பார்த்து.. அதை ருசித்து வளர்ந்தவர் இளவரசி.

அவர்கள் செய்யும் தின்பண்டங்களை அருகில் உள்ள வீடுகளுக்கும் விற்பனை செய்து வந்தார். திருமணத்திற்கு பிறகு இளவரசி தனது குடும்பத் தொழிலை தொடர ஆசைப்பட்டார். இதற்காக 2010-ஆம் ஆண்டில் இளவரசியும், அவருடைய குடும்பத்தினரும் சேர்ந்து திருச்சூரில் ஒரு சூப்பர் மார்க்கெட் தொடங்கினர்.
அதற்காக தன்னுடைய சேமிப்பு முழுவதையும் பயன்படுத்தினார், வங்கிகளிலும் கடன் பெற்றார். இளவரசியின் சேமிப்பு மற்றும் வங்கியில் இருந்த பெற்ற கடன் அனைத்தையும் சேர்த்து 50 லட்சம் ரூபாய் புரட்டினார். சூப்பர் மார்க்கெட் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் தொழில் சிறப்பாகவே இருந்தது. விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடியது. இவர் தொடங்கிய சூப்பர் மார்க்கெட்டில் சுமார் 50 பேருக்கு மேல் பணிபுரிய தொடங்கினர்.
ஆரம்பத்தில் தன் குடும்பத்தாரின் உதவியுடன் வீட்டில் செய்யப்படும் தின்பண்டங்களையும் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்தார். வீட்டிலேயே செய்யப்படும் பொருட்கள் என்பதால் லாபமும் அதிகம் கிடைத்தது. ஆனால் இந்த மகிழ்ச்சி இளவரசிக்கு ஓராண்டு கூட நிலைக்கவில்லை.
2011-ஆம் ஆண்டில் அவர் தொடங்கிய சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை சம்பவம் நடந்தது. இதனால் அவருடைய ஒட்டு மொத்த உழைப்பும் பறிபோனது. இந்தச் சம்பவத்தால் அவருடைய விற்பனை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் வங்கியில் வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்ற கவலையே இளவரசியயை மன அழுத்தத்திற்கு ஆளாக்கியது.
நடந்த சம்பவத்தை மறக்க முடியாமல் பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஒருபுறம் அவருக்கு கடன் கொடுத்தவர்களும் பணத்தை திருப்பி தர அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். அப்போது அவரிடம் கடனை கொடுக்கும் அளவுக்கு பணம் இல்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இளவரசி மனம் தளர வில்லை. மீண்டும் உழைக்க தொடங்கினார்.
2012 ஆம் ஆண்டில் திருச்சூர் ரயில் நிலையத்தில் “அஸ்வதி ஹாட் சிப்ஸ்” என்ற கடையை தொடங்கினார். இதற்கு அவர் செய்த முதலீடு என்னவோ வெறும் 100 ரூபாய் தான். அவர் தொடங்கிய சிறு தொழிலுக்கு ரயில் நிலையம் உதவிகரமானதாக இருந்தது.
ஏனெனில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பயணிகள் அந்த பகுதி வழியாக செல்வதால் வாடிக்கையாளர்கள் அதிகரிக்க தொடங்கினர். சிப்ஸ்., வடை போன்ற தின்பண்டங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. படிப்படியாக தன் கடனை அடைக்கத் தொடங்கினார்.
கோடிகளில் கிடைத்த லாபம்: காலப்போக்கில் நல்ல வருமானம் கிடைக்கவே திருச்சூரில் பல கிளைகளைத் திறந்தார். சிப்ஸ் மட்டுமின்றி ஸ்வீட், கேக், ஊறுகாய்கள் என தனது தயாரிப்பையும் விரிவு படுத்தினார். பின்னர் ஜனவரி 2020-ஆம் ஆண்டு “இளவரசி புட்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற பெயரில் தன்னுடைய நிறுவனத்தை பதிவு செய்தார்.
இதற்காக வெளியில் இருந்து எந்த முதலீடும் இளவரசி பெறவில்லை. முழுக்க முழுக்க தன்னுடைய சொந்த உழைப்பால் நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றார். இப்படி படிப்படியாக வளர்ந்த நிறுவனம் 2022-ம் நிதியாண்டில் ரூ.35 லட்சத்திலிருந்து 2023-ஆம் நிதியாண்டில் ரூ.1.25 லட்சம் வருமானம் பார்க்கும் அளவிற்கு உயர்ந்தது.
சிறந்த மார்க்கெட்டிங் யுக்திகளை தெரிந்து கொண்டு வியாபாரத்தை தொடர்ந்தார். இதனால் 2025-ஆம் ஆண்டில் இந்நிறுவனம் சுமார் ரூ.2.14 கோடி வருமானம் ஈட்டியது. தன்னுடைய முதல் முயற்சி தோற்றுப் போனாலும் அதிலிருந்து மனம் தளராமல் மீண்டு வந்து.. அவர் தொடங்கிய தொழிலே இன்று அவரை ஒரு தொழிலதிபராக மாற்றியுள்ளது. நமக்கு வரும் பிரச்சனைகளை கண்டு பயப்படாமல் இளவரசியை போல் உத்வேகத்துடன் செயல்பட்டால் எப்பேற்பட்ட பிரச்சனையும் பயந்து ஓடிவிடும் என்பதற்கு இவருடைய கதை ஒரு சிறந்த உதாரணம்.
