Last Updated:
Nongu Sales| தற்போது 20 ரூபாய்க்கு 4 முதல் 5 நுங்குகள் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் ஏராளமான மக்கள் நுங்குகளை வாங்கிச் சென்று கோடை வெப்பத்தை தணித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சாலையோரங்களில் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் ஆர்வமுடன் நுங்குகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், விழுப்புரத்திலும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த கடும் வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் வெள்ளரிப்பழம் போன்றவற்றை அதிகமாக நாடி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நுங்கு விற்பனையும் அதிகரித்துள்ளது.
விழுப்புரம் நகரில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பழைய பேருந்து நிலையம், திரு.வி.க. சாலை, ரங்கநாதன் சாலை, விழுப்புரம் – புதுச்சேரி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரமாக நுங்குகளை குவித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
தர்பூசணி மற்றும் வெள்ளரிப்பழங்களை விட நுங்கின் விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது ரூ.20க்கு 4 முதல் 5 நுங்குகள் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் ஏராளமான மக்கள் நுங்குகளை வாங்கிச் சென்று கோடை வெப்பத்தை தணித்து வருகின்றனர்.
இதுகுறித்து நுங்கு வியாபாரி ஒருவர் கூறுகையில், “தற்போது கோடை வெயில் கடுமையாக இருப்பதால் நுங்கு விற்பனை மிகவும் நன்றாக நடைபெற்று வருகிறது. விலை குறைவாக இருப்பதால் மக்கள் போட்டிப்போட்டு வாங்கிச் செல்கின்றனர். இன்னும் சில நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்பதால், நுங்கு விற்பனை இன்னும் அதிகரிக்கும்” என்றார்.
May 14, 2026 12:07 PM IST

