மதுரோவின் துணை அதிபராக இருக்கும் டெல்சி ரோடறிகஸ் அவருக்கு அடுத்து அதிபராக வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அவர் அமெரிக்காவுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடிப்பாரா அல்லது எண்ணெய்த் துறையில் அமெரிக்க முதலீட்டை அனுமதித்து அமெரிக்காவுடன் சமாதானத்தை “வாங்குவாரா” என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.
ஆனால் இந்த நடவடிக்கைக்குப் பின்னர் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், வெனிசுவேலாவில் நியாயமான மாற்றம் வரும் வரை, வெனிசுவேலாவை அமெரிக்காவே கட்டுப்பாட்டில் எடுத்து நடத்தும் என்று அறிவித்திருக்கிறார்.
இன்னொரு விஷயம், மதுரோவின் ஆதரவாளர்கள், மற்றும் வெனிசுவேலாவில் பிற கட்சி ஆதரவாளர்களின் நிலைப்பாட்டைத் தாண்டி, பொதுமக்கள் எப்படி இந்த அமெரிக்க ராணுவத் தலையீட்டைப் பார்க்கிறார்கள் என்பது முக்கியமானது.
கடந்த ஆண்டு ( 2025) நடந்த தேர்தலில் மதுரோ மூன்றாவது முறையாக வென்றிருந்தாலும், அது எதிர்க்கட்சிகள் புறக்கணித்த தேர்தல் என்பதும், சுமார் 42% வாக்காளர்களே வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர் என்பதும், அவர் வெற்றியின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியிருந்தன.
ஆனால் அவருக்கு இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க அளவு ஆதரவு இருக்கத்தான் செய்கிறது. அவரது விசுவாச ஆதரவாளர்களின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பது கவனிக்கவேண்டிய விஷயம்.
வெனிசுவேலாவின் வீதிகளில் இறங்கி பொதுமக்கள் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அது அமெரிக்கா இராக்கில் எதிர்கொண்டது போன்ற எதிர்பாராத விளைவுகளை உருவாக்கலாம்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ரஷ்யா, சீனா போன்ற பிற வல்லரசுகளையும், தங்கள் பிராந்தியங்களில் இதே போல “வல்லான் வகுத்ததே வாய்க்கால்” என்ற போக்கை கடைப்பிடிக்க ஊக்குவிக்கலாம். குறிப்பாக ரஷ்யா தனது யுக்ரெயின் போர் பற்றி மேலை நாடுகள் கண்டனத்தை, அமெரிக்காவின் வெனிசுவேலா தாக்குதலை உதாரணம் காட்டியே நிராகரிலாம். அதே போல, சீனாவின் ஷி ஜின்பிங்கும், கடந்த வாரம்தான் தைவானைச்சுற்றியுள்ள கடற்பரப்பில் சீனாவின் படைகள் ஒத்திகை நடத்த உத்தரவிட்டிருந்தார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை அடுத்து சீனாவும் இதே போல தைவானின் மீது படையெடுத்தால் எந்த அளவு அதை அமெரிக்காவால் எதிர்க்க முடியும் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

