Last Updated:
வெனிசுலா ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்றும், அதன் இயற்கை வளங்கள் மீது அந்த நாட்டுக்கே முழு அதிகாரம் உண்டு என்றும் சீனா கூறியுள்ளது.
வெனிசுலா நாட்டின் இறையாண்மை விவகாரத்தில் அமெரிக்காவின் செயல்பாடுகளை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது
வெனிசுலா மீது அமெரிக்கா நடத்தும் தாக்குதல்கள் மற்றும் அந்த நாட்டின் மீது திணிக்கும் நிபந்தனைகளை “அராஜகம்” என்று சீனா சாடியுள்ளது. இது சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும், ஒரு நாட்டின் இறையாண்மையில் தலையிடுவதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
போதைப் பொருட்களை சட்ட விரோதமாக அதிக எண்ணிக்கையில் வெனிசுலா அமெரிக்காவுக்குள் கடத்துவதாக கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்நாட்டிற்கு தற்காலிக அதிபராக டெல்சி ரோட்ரிகஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வெனிசுலாவின் தற்காலிக அதிபரை சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் கியூபா ஆகிய நாடுகளுடனான பொருளாதார உறவுகளைத் துண்டித்துவிட்டு, அமெரிக்காவுடன் மட்டுமே வர்த்தகம் செய்ய வேண்டும் என்று வாஷிங்டன் வலியுறுத்தியுள்ளது. இதற்குச் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
January 07, 2026 10:29 PM IST


