வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோர், அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதுதான் ஒட்டுமொத்த உலகத்தின் பேசுபொருளாகியிருக்கிறது. அமெரிக்காவில் போதைப்பொருள் புழக்கத்திற்கு வெனிசுலா அதிபரே காரணம் என குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கிறிஸ்துமஸ் தினத்தன்று விடுத்த கடைசி எச்சரிக்கையை அடுத்த 8 நாட்களில் செயல்படுத்தினார்.
சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் வெனிசுலா மீது அமெரிக்க படைகள் அதிரடியாக குண்டுவீசி தாக்குதல் நடத்தின. தலைநகர் காரகாஸ் மீது அடுத்தடுத்து 7 இடங்களில் ராணுவ விமானங்கள் குண்டுவீசியதால் பல இடங்கள் இருளில் மூழ்கின. காரகாசில் உள்ள லா கார்லோட்டா ராணுவ விமான நிலையம், மற்றும் ஃபுவர்டே டியூனா ராணுவத் தளம் ஆகியவை கடுமையாக சேதமடைந்தன. காரகாஸ் மட்டுமின்றி மிரண்டா, அராகுவா, லாகுவா உள்ளிட்ட பல மாநிலங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் ராணுவ நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக வெனிசுலா பாதுகாப்புத்துறை அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
இந்த நிலையில் தான், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க படைகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாலை 4.30 மணிக்கு மேல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்- ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார். அமெரிக்காவின் சட்டங்களுக்கு உட்பட்டே வெனிசுலா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும். மிகப்பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியிருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, தலைநகர் காரகாஸ் மீது தாக்குதல் தொடங்கிய அடுத்த 3 மணி நேரத்தில் மதுரோ சிறைபிடிக்கப்பட்டிருந்தார். ஒசாமா பின்லேடனை பிடிக்கும் பணியில் கடற்படையுடன் இணைந்து செயல்பட்ட டெல்டா படை மிகத் துல்லியமாக இந்த தாக்குதலை நிறைவேற்றியதால், அமெரிக்க தரப்பில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், அமெரிக்காவின் போர்க்கப்பலான USS Iwo Jima-வில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மதுரோ இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டொனால்டு டிரம்ப், மதுரோவை சட்டவிரோத சர்வாதிகாரி என்று விமர்சித்தார்.
மதுரோவும் அவரது மனைவியும் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என தெரிவித்தார். வெனிசுலாவில் முறையான ஆட்சிமாற்றம் ஏற்படும் வரை அமெரிக்கா நிர்வகிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். வெனிசுலாவுக்குள் சென்று அந்நாட்டு அதிபரை கைது செய்ததன் மூலம் அமெரிக்க படைகளின் திறன் மற்றும் வலிமை மீண்டும் உலகுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறினார். வெனிசுலாவில் எண்ணெய் வணிகத்தில் ஏற்பட்டுள்ள தோல்வியை சரிசெய்து, வருமானத்தை ஈட்டும் பணியில் அமெரிக்க நிறுவனங்கள் ஈடுபடும் என்றும், தேவைப்பட்டால், மீண்டும் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெனிசுலாவின் இடைக்கால அதிபராக, தற்போதைய துணை அதிபர் டெல்சி ரோட்ரிக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்துள்ள நிலையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தற்போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

