தனது காணிக்கு சிவப்பு நோட்டீஸ் ஒட்டினால் வெடிவிழும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மிரட்டியதால் அவரது காணிக்கு சிவப்பு எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டவில்லை என மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.ஜெசீதன் கூறியதால் சபையில் கடும் அமளிதுமளி ஏற்பட்டது.
மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்விலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.
பெரியவிளான் பகுதியில் உள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் காணியில் பற்றைகள் வளர்ந்துள்ளதால் அதிலிருந்து பாம்புகள் வெளிவந்து குடிமனைகளுக்குள் புகுவதால் மக்கள் அச்ச நிலையில் இருப்பதாகவும், அதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதேச சபையின் உறுப்பினர் எட்வேட் மரியவாசினி கடந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.
சிவப்பு நோட்டீஸ்
அதற்கு பதிலளித்த தவிசாளர் குறித்த காணிக்கு சிவப்பு நோட்டீஸ் ஒட்டுவதாக தெரிவித்த நிலையில் அது இதுவரை ஒட்டப்படவில்லை. இந்நிலையிலேயே குறித்த விடயம்
இன்று சபை அமர்வில் களேபரத்தை ஏற்படுத்தியது.
இதன்போது கருத்து தெரிவித்த உறுப்பினரான அச்சுதபாயன், “பெண்களை அவதூறாக பேசும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் காணிக்கு நீங்கள் இதுவரை ஏன் சிவப்பு நோட்டீஸ் ஒட்டவில்லை? அந்த நோட்டீஸை எங்களிடம் தந்தால் நாங்கள் ஒட்டுவதாக தானே கூறினோம். ஆனால் தாங்கள் அதனை ஏன் செய்யவில்லை. எங்களிடம் தந்திருந்தால் நாங்களே அந்த நோட்டீஸை ஒட்டி இருப்போம்.

அதற்கு பதிலளித்த தவிசாளர் க.ஜெசீதன், ஒரு நோட்டீஸ் ஒட்டுதல், அல்லது ஒரு கடிதத்தை கொடுத்தல் என்பது ஒரு அடையாளப்படுத்தல் தான். அந்த கடிதம் அல்லது
நோட்டீஸை விட தாங்கள் இந்த சபையில் கதைத்த விடயமானது ஊடகங்களூடாக காத்திரமாக அடையாளப்படுத்தப்பட்டது.
அந்த காணி வழக்கில் இருக்கிறது என்றால், நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர் அந்த காணியை சுத்தம் செய்ய வேண்டும். அத்துடன் அந்த நோட்டீஸை நானோ, அல்லது உறுப்பினர்களோ ஒட்ட முடியாது. ஒரு உத்தியோகத்தரே ஒட்ட வேண்டும்.
நோட்டீஸ் ஒட்டுவோம் என்று கூறிய அடுத்த நாளே அந்த நாடாளுமன்ற உறுப்பினர், நோட்டீஸ் ஒட்ட வருபவர்களுக்கு வெடி விழும் என்று தனது சமூக வலைத்தளத்தில் கூறினார். ஆகவே அரச உத்தியோகத்தர்கள் அச்சப்படுகின்றனர். அரச உத்தியோகத்தர்களின் உயிரை பணயம் வைக்க முடியாது.” என்றார்.
மக்களது பாதுக்காப்பு
இந்நிலையில் குறித்த பெரியவிளான் வட்டார உறுப்பினர் எட்வேட் மரியவாசினி கருத்து தெரிவிக்கையில்,
குறித்த பிரச்சினை எனது வட்டாரத்தில் தான் காணப்படுகிறது. நோட்டீஸ் ஒட்டுவதாக கூறிய தவிசாளர், அதனை ஒட்டாமல் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பயப்படுகின்றாரா?

நான் கொழும்பு சென்றதால் கடந்த சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு வருகை தர முடியவில்லை. ஆனால் அங்கு உப தவிசாளரர் சுதாகர், என்னில்தான் பிழை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பக்கப்பாட்டு பாடுகிறார். எனது வட்டார பிரச்சினை உப தவிசாளருக்கு என்ன தெரியும்?
குறித்த காணியை விரைவில் சுத்தம் செய்து, மக்களது பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும் என காரசாரமான கருத்துகளை முன்வைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

