கோவை: வீட்டு மேற்கூரை மின்சக்தி உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அரசுக்கு நுகர்வோர் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
பிரதமரின் சூர்யோதயா யோஜனா திட்டத்தின் கீழ், வீடுகளில் மேற்கூரை மின்சக்தி உற்பத்தி திட்டத்துக்கான கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, சோலார் தகடுகளைப் பொருத்தி சூரிய சக்தி மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நகரங்களில் தொழில் துறையினரின் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் வீடுகளில் சோலார் தகடுகளைப் பொருத்தி, தேவைக்கேற்ப மின் உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு மேற்கூரை சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்பவர்களுக்கு மின்சாரத் துறை சார்பில் ‘நெட்வொர்க் கட்டணம்’ விதிக்கப்பட்டு வருகிறது. மேற்கூரை சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து மின் வாரியத்துக்கு கிரிட் மூலம் திருப்பி அனுப்பும்போது, அந்த மின்சாரத்தை எடுப்பதற்கான கட்டணம் நெட்வொர்க் கட்டணமாகும். வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்பவர்களுக்கு நெட்வொர்க் கட்டணம் பெரிய இடையூறாக உள்ளது.
ஆண்டுக்கு ஒருமுறை கணக்கிட்டு, திருப்பி அளிக்கப்படும் மின்சாரத்துக்கு ஏற்ப மின்வாரியம் குறிப்பிட்ட தொகையைத் தர வேண்டும். ஆனால் அவ்வாறு தருவதில்லை. தொழில் நிறுவனங்கள் சார்பில் நெட்வொர்க் கட்டணம் தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டு, அந்த கட்டணத்தை ரத்து செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் (காஸ்) அமைப்பின் தலைவர் கதிர்மதியோன் கூறும்போது, ‘‘நீதிமன்றமே தவறு என்று கூறியும்கூட, மேற்கூரை சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்பவர்களுக்கு நெட்வொர்க் கட்டணம் விதிப்பதை ஏற்க முடியாது. இதனால் பல வீட்டு உபயோகிப்பாளர்கள், தங்களது கூடுதல் உற்பத்திக்கான கட்டமைப்பை திரும்ப ஒப்படைக்கின்றனர். வீட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பயன்பாடு போக மீதமுள்ள மின்சாரத்தை மின் வாரியத்துக்கு அனுப்பும்போது, அதற்கான கட்டணத்தையும் தருவதில்லை. மேலும், பல்வேறு காரணங்களைக் கூறி நெட்வொர்க் கட்டணம் விதிக்கப்படுகிறது. எனவே, வீட்டு உபயோக சூரியசக்தி மின் உற்பத்தி திட்டத்துக்கு நெட்வொர்க் கட்டணம் விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’’ என்றார்.