வாழ்நாள் சான்றிதழ் அளிக்க ஓய்வூதியதாரர்கள் இனி வங்கிகள் அல்லது EPFO அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB) மற்றும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இணைந்து, 1995ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு வீட்டிலேயே டிஜிட்டல் முறையில் வாழ்நாள் சான்றிதழ் வழங்கும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இரு நிறுவனங்களும் இக்கூட்டாண்மைக்காக சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம், EPFO ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் முறையில் தங்களது முக அங்கீகாரமும், கைரேகை பயோமெட்ரிக் அங்கீகாரமும் பயன்படுத்தி, வீட்டிலிருந்தே தங்கள் ஜீவன் பிரமான் (Jeevan Pramaan) எனப்படும் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.
IPPB-ன் 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்களும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தபால் சேவை வழங்குநர்களும், அதாவது தபால்காரர்கள் மற்றும் கிராமிய டாக் சேவகர்கள் இந்த சேவையில் பங்கேற்கின்றனர். இவர்கள் அனைவரும் வங்கி சேவைகளுக்கான கைபேசி சாதனங்களுடன் இணைக்கப்பட்டிருப்பதால், ஓய்வூதியதாரர்களின் வீட்டுக்கே வந்து வாழ்நாள் சான்றிதழை வழங்க முடியும். இந்த டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை வழங்குவதற்கான முழுச் செலவையும் EPFO ஏற்கும் என்பதால், ஓய்வூதியதாரர்களுக்கு இது முழுக்க முழுக்க இலவசமான சேவை ஆகும்.
இந்த ஒப்பந்தம் IPPB-ன் 73-வது நிறுவனர் தின விழாவில் கையெழுத்தானது. விழாவில், IPPB நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.விஸ்வேஸ்வரன் மற்றும் EPFO மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா கலந்து கொண்டார்.
“இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் அத்தியாவசிய நிதி மற்றும் குடிமக்களுக்கான சேவைகளைக் கொண்டுசெல்வதற்கான IPPB-ன் நோக்கத்தை, EPFO உடனான இந்த கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துகிறது. எங்கள் தொழில்நுட்பம் சார்ந்த தபால் வலையமைப்பும், நம்பகமான கடைசி மைல் தூரம் வரை சென்றடையும் திறனும், EPFO ஓய்வூதியதாரர்களுக்கு குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு மிகப் பெரிய நன்மையாக இருக்கும்” என்று ஆர்.விஸ்வேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும் அவர், “இந்த முயற்சி இந்திய அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ மற்றும் ‘மக்களின் வாழ்க்கையை எளிதாக்குதல்’ போன்ற நோக்கங்களுடன் இணைந்து, மூத்த குடிமக்களுக்கு தொழில்நுட்பத்தின் மூலம் அவர்களது வீட்டு வாசலிலேயே சேவை வழங்குவதை உறுதி செய்கிறது” என்றார்.
IPPB ஏற்கனவே 2020ஆம் ஆண்டிலிருந்து ‘வீட்டிலேயே ஜீவன் பிரமான்’ சேவையை வழங்கி வருகிறது. இதில் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் ஜீவன் பிரமான் சான்றிதழைப் பெற முடியும்.
சான்றிதழைப் பெறுவதற்காக ஓய்வூதியதாரர்கள் தங்கள் தபால்காரரைத் தொடர்பு கொள்வது அல்லது அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் செல்வது போதுமானது. அங்கு தங்களது ஆதார் எண் மற்றும் ஓய்வூதிய விவரங்களை வழங்கி, கைரேகை அங்கீகாரம் மூலம் கோரிக்கையை உறுதிப்படுத்தலாம்.
இந்த புதிய திட்டத்தால், EPFO ஓய்வூதியதாரர்கள் குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் வீட்டிலிருந்தே தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இதனால் நேரமும், சிரமமும் மிச்சப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
November 07, 2025 8:46 PM IST
வீட்டில் இருந்தபடியே வாழ்நாள் சான்றிதழைப் பெற வசதி… இந்தியா போஸ்ட் – EPFO இணைந்து புதிய திட்டம் அறிமுகம்…!

