வீடுகள், வணிக வளாகங்கள் அல்லது பிற சொத்துக்களை வாடகைக்கு விடுவதற்கு முன்பு, சொத்து உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், வாடைகக்கு விடுபவர்கள் தொடர்பில் முறையான பின்னணிச் சோதனைகளை மேற்கொள்ளுமாறும் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஊடகங்களிடம் பேசிய சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஜீவ மெதவத்த, வாடகைக்கு விடப்பட்ட சொத்துக்களிலிருந்து போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிற பொருட்கள் அடிக்கடி மீட்கப்படுவதாகக் கூறினார்.
வாடகை வீடுகளில் இடம்பெறும் குற்றச்செயல்கள்
சில சொத்து உரிமையாளர்கள்,வாடகைதாரர்களின் பின்னணியைச் சரிபார்க்காமல் தங்கள் வளாகங்களை வாடகைக்கு விடுவதாகவும் அவர் கூறினார்.
சூழ்நிலைகள் மற்றும் பொருந்தக்கூடிய சட்டத்தைப் பொறுத்து, தங்கள் வளாகங்களில் குற்றச் செயல் நடந்தால், சொத்து உரிமையாளர்கள் சட்டரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

தங்கள் சுற்றுப்புறங்களில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது நடவடிக்கைகள் குறித்து, குறிப்பாக அப்பகுதியில் அறிமுகமில்லாத நபர்கள் தென்படும்போது, காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் ஒத்துழைப்பு முக்கியம்
குற்றச் செயல்களைக் கண்டறிவதிலும் தடுப்பதிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு முக்கியப் பங்காற்றியுள்ளது என்று பிரதி காவல்துறை மா அதிபர் மெதவத்த கூறினார்.

அரசாங்கத்தின் தற்போதைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரசாரமானது, பொதுமக்களைப் பாதுகாப்பதையும் இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருட்களின் கிடைப்பைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

