மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 42 வயதான தீபக் மஹாவர். பாம்பு பிடி வீரரான இவர், பல்வேறு பகுதிகளில் பாம்புகளைப் பிடித்த அனுபவம் உள்ளவர். இந்த நிலையில் பர்பத்புரா கிராமத்தில் ஒரு கல்வி நிறுவனத்தில் கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று பதுங்கிக் கிடப்பதாகவும், அதை வந்து பிடிக்குமாறும் தீபக் மஹாவருக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து அங்கு சென்ற அவர், அந்த விஷப்பாம்பை லாவகமாகப் பிடித்தார்.
அப்போது பள்ளியில் படிக்கும் அவருடைய மகனை அழைத்து வருமாறு அவருக்கு வீட்டில் இருந்து மனைவி செல்போன் மூலம் கூறியிருக்கிறார். உடனே கொடிய விஷமுள்ள அந்தப் பாம்பை அவர் தனது கழுத்தில் போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மகன் படிக்கும் பள்ளிக்கூடத்துக்குச் சென்றார்.
மகனை அழைத்துக் கொண்டு வரும் வழியில் தனது கழுத்தில் பாம்பு கிடப்பதை செல்போனில் வீடியோ எடுத்து அதனை ‘ரீல்ஸ்’ ஆக வெளியிட நினைத்தார். அதன்படி, மஹாவர் வீடியோவுக்கு பந்தாவாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இடை இடையே அந்தப் பாம்புக்கு முத்தங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆன பாம்பு அவரது கையில் கொத்தி விட்டது. அதை எதிர்பாராத மஹாவருக்கு உடனே விஷம் உடல் முழுவதும் பரவ அவர் நிலைகுலைந்து கீழே விழுந்து விட்டார். உடனடியாக அவரை மீட்ட அப்பகுதி மக்கள் அவரைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி தீபக் மஹாவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இந்த நிலையில் தீபக் மஹாவர், விஷப்பாம்பைக் கழுத்தில் போட்டுக்கொண்டு சுற்றிய ரீல்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது. விஷப்பாம்புடன் விபரீதமாக விளையாடி பாம்பு பிடி வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.