நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு சிறு போகத்திற்கான உர மானியத்தை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை எந்தவொரு திட்டத்தையும் தயாரிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை தேசிய விவசாயிகள் ஒன்றியம் (National Farmers’ Union) தெரிவித்துள்ளது.
அத்துடன் விவசாயிகள் தங்கள் பயிர்ச்செய்கை பணிகளை ஆரம்பித்திருந்தாலும், இதுவரை உர மானியம் வழங்குவதற்கான அடிப்படை நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளப்படவில்லை என அதன் தலைவர் அனுராத தென்னகோன் (Anuradha Tennakoon) குறிப்பிட்டுள்ளார்.
வெளியாகவுள்ள சுற்றறிக்கை
இது தொடர்பாக ஊடகம் ஒன்று விவசாய சேவைகள் ஆணையாளர் நாயகம் யூ. பி. ரோஹன (U. B. Rohana) ராஜபக்சவிடம் வினவியபோது, உர மானியம் வழங்குவதற்கான சுற்றறிக்கை அடுத்த சில நாட்களுக்குள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறு போகத்திற்கான உர மானியத்தை விவசாயிகளுக்கு வழங்குவது, பெரும் போகத்திற்கு சமமாகவே வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வழங்கப்படவுள்ள கொடுப்பனவு
ஒரு ஹெக்டேருக்கு 5,000 ரூபா வீதம் முதல் கட்டத்தில் 15,000 ரூபாவும் மற்றும் இரண்டாவது கட்டத்தில் 10,000 ரூபாவும் வழங்கப்படும். அதிகபட்சமாக 2 ஹெக்டேயருக்கு மட்டுமே வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை அதற்கான சுற்றறிக்கையை நாங்கள் வெளியிடவில்லை. அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் அது நடைபெறும் என நினைக்கிறேன்.
மேலும், விவசாயிகளுக்கு மற்ற பயிர்களுக்காகவும் ஒரு ஹெக்டேருக்கு 15,000 ரூபாவும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |