Last Updated:
பந்தல் முறையில் சாகுபடி செய்வதன் மூலம் அழுகல் பாதிப்பு குறைந்து, தரமான காய்கறிகள் கிடைப்பதால், உள்ளூர் சந்தைகள் மட்டுமின்றி, வெளிமாவட்ட சந்தைகளிலும் இந்த காய்கறிகளுக்கு தொடர்ந்து தேவை உள்ளது.
விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் பந்தல் முறையில் கொடி வகை காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த முறை, காய்கறிகளின் தரத்தை மேம்படுத்துவதோடு, விவசாயிகளுக்கு கூடுதல் வருவாயையும் ஈட்டித் தருவதாகக் கூறப்படுகிறது. மழை காரணமாக தற்போது விலை குறைந்திருந்தாலும், வெளிமாவட்ட சந்தைகளில் நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஆண்டு முழுவதும் காய்கறிகளுக்கு நிலையான தேவை இருப்பதால், விவசாயிகள் காய்கறி சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பாகற்காய், சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற கொடி வகை காய்கறிகளை சாகுபடி செய்ய பந்தல் முறை பயனுள்ளதாக கருதப்படுகிறது.
விழுப்புரம் அருகே பானாம்பட்டு, சித்தாத்தூர், ஏழுசெம்பொன், சோழம்பூண்டி, சோழகனூர், கோலியனூர், ஈசனி, வடசிறுவளூர் உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் பந்தல் முறையில் பாகற்காய், சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் ஆகிய காய்கறிகளை பயிரிடுகின்றனர். இந்த முறையில் பலமான கான்கிரீட் அல்லது கல் தூண்கள் அமைத்து, அவற்றின் மீது கம்பிகள் மற்றும் வலைகள் பொருத்தப்பட்டு பந்தல் அமைக்கப்படுகிறது.
பந்தல் முறையில் கொடிகள் மேல்நோக்கி படர்ந்து வளருவதால், அவற்றுக்கு சீரான சூரிய ஒளி கிடைக்கிறது. மேலும், காற்றோட்டமும் அதிகரிக்கிறது. இதனால் பூக்கள் அதிகமாக பூத்து, காய்களின் விளைச்சலும் அதிகரிக்கிறது. காய்கள் தரையில் படாமல் இருப்பதால், மண்ணின் ஈரப்பதம் காரணமாக ஏற்படும் அழுகல் போன்ற பாதிப்புகள் குறைகின்றன. இதனால் காய்கள் நீளமாகவும், பளபளப்பான பச்சை நிறத்திலும் தரமானதாக கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது சந்தைகளில் நல்ல வரவேற்பைப் பெற உதவுகிறது. கொடிகள் பந்தலில் பரவியிருப்பதால், காய்களை அறுவடை செய்வதும், அவற்றை பராமரிப்பதும் எளிதாகிறது. தேவையற்ற கிளைகளை அகற்றுதல் மற்றும் பயிர் பாதுகாப்புப் பணிகளையும் சுலபமாக மேற்கொள்ள முடிகிறது.
பந்தல் முறையில் சாகுபடி செய்வதன் மூலம் அழுகல் பாதிப்பு குறைந்து, தரமான காய்கறிகள் கிடைப்பதால், உள்ளூர் சந்தைகள் மட்டுமின்றி, வெளிமாவட்ட சந்தைகளிலும் இந்த காய்கறிகளுக்கு தொடர்ந்து தேவை உள்ளது. இது கொடி வகை காய்கறிகளை பந்தல் முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. தற்போது மழை பெய்து வருவதால், உள்ளூர் சந்தைகளில் காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இன்னும் ஒரு வாரத்திற்குப் பிறகு காய்கறிகள் நல்ல விலைக்கு வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் கூறினர்.
