இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் அரசியல்ரீதியாக பொருள்படும் வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் டி20 ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடிய முதல் போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவில்லை.
மேலும் செய்தியாளர் சந்திப்பின்போது, பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு துணை நிற்பதாகவும், அச்சம்பவத்துக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஆபரேஷ் சிந்தூர் தாக்குதலில் பங்கேற்ற பாதுகாப்புப் படையினருக்கு தங்கள் வெற்றியை சமர்ப்பிப்பதாகவும், சூர்யகுமார் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக ஐசிசியிடம் பாகிஸ்தான் அளித்த புகாரின் அடிப்படையில் ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் முன்பு சூர்யகுமார் ஆஜராகி நேற்று விளக்கம் அளித்தார். அப்போது அவருக்கு அரசியல் ரீதியாக பொருள்படும் விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதற்காக அவரது போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் பிடித்தம் அல்லது கடும் எச்சரிக்கை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதுபோல், இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டது போல் சைகை செய்த பாகிஸ்தான் வீரர் ஹேரிஸ் ரவுப் மற்றும் அரை சதம் அடித்ததும் துப்பாக்கியால் சுடுவதைப் போல் ஆக்ஷன் காட்டிய சாஹிப்ஜாதா ஃபர்ஹான் ஆகியோரிடம் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

