Last Updated:
இந்திய ரயில்வே தனது முழு நெட்வொர்க்கையும் மேம்படுத்துவதற்கான மற்றொரு முக்கிய விஷயத்திற்கு இப்போது தயாராகி வருகிறது.
சமீப ஆண்டுகளாக இதுவரை இல்லாத அளவிற்கு இந்திய ரயில்வே பெரிய அளவிலான உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு அதி முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்படுகின்றன. ரயில் பாதைகள் துவங்கி எஞ்சின்கள், ரயில் பெட்டிகள், ரயில் நிலையங்கள், நவீன அம்சங்கள் கொண்ட ரயில்களின் சேவை என அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் ரயில்களின் சராசரி வேகத்தை அதிகரிப்பதும், பயணிகள் தாங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கு விரைவாக சென்று சேர்வதை உறுதி செய்வதும் இந்திய ரயில்வேயின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. அதே நேரம் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை மக்களுக்கு வழங்குவதற்கும் இந்திய ரயில்வே நிர்வாகம் முன்னுரிமை அளிக்கிறது.
இந்த காரணங்களுக்காக பழைய ICF பெட்டிகள் படிப்படியாக புதிய LHB பெட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இது பயணிகளின் வசதியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ரயில்களின் வேகமாக செல்லும் திறனையும் மேம்படுத்துகிறது. LHB ரயில் பெட்டிகள் பொருத்தப்பட்ட ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் (சராசரியாக 160 கி.மீ. வேகத்தில்) இயங்க முடியும் என்னும் சூழலில், பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டுவரும் ICF பெட்டிகள் அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்ல முடியும்.
இந்திய ரயில்வே தனது முழு நெட்வொர்க்கையும் மேம்படுத்துவதற்கான மற்றொரு முக்கிய விஷயத்திற்கு இப்போது தயாராகி வருகிறது. மத்திய ரயில்வே (CR) அதன் 16 ரயில்களில் உள்ள பழைய ICF (Integral Coach Factory) பெட்டிகளை அகற்றி, நவீன LHB (லிங்க் ஹாஃப்மேன் புஷ்) பெட்டிகளாக மாற்றி நவீனப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த முயற்சி பயணிகளின் பாதுகாப்பு, வசதி மற்றும் பயண தரங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய ரயில்வே படிப்படியாக ICF பெட்டிகளை அகற்றி, அவற்றுக்கு பதிலாக LHB மாடல்களை மாற்றி வருகிறது.
LHB பெட்டிகள் ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. மேலும், இவை துருப்பிடிக்காத எஃகு பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டவை. இதனால் நாடு முழுவதும் நீண்ட தூர வழித்தடங்களில் செல்லும் ரயில்களில் இவற்றைப் பயன்படுத்த இந்திய ரயில்வே பெரிதும் விரும்புகிறது.
| வண்டி எண் | வழித்தடம் | பயன்பாட்டுக்கு வரும் தேதி |
| 22157 | Chennai – CSMT Express | 14.01.2026 |
| 22158 | Chennai – CSMT Express | 17.01.2026 |
| 11088 | Pune – Veraval Express | 15.01.2026 |
| 11087 | Veraval – Pune Express | 17.01.2026 |
| 11090 | Pune – Bhagat Ki Kothi Express | 18.01.2026 |
| 11089 | Bhagat Ki Kothi – Pune Express | 20.01.2026 |
| 11092 | Pune – Bhuj Express | 19.01.2026 |
| 11091 | Bhuj – Pune Express | 21.01.2026 |
| 22186 | Pune – Ahmedabad Express | 21.01.2026 |
| 22185 | Ahmedabad – Pune Express | 22.01.2026 |
| 11404 | Kolhapur – Nagpur Express | 19.01.2026 |
| 11403 | Nagpur – Kolhapur Express | 20.01.2026 |
| 12147 | Kolhapur – Hazrat Nizamuddin Express | 20.01.2026 |
| 12148 | Hazrat Nizamuddin – Kolhapur Express | 22.01.2026 |
| 11050 | Kolhapur – Ahmedabad Express | 24.01.2026 |
| 11049 | Ahmedabad – Kolhapur Express | 25.01.2026 |
LHB பெட்டிகள் பொதுவாக பாதுகாப்பு மற்றும் வேகத்திற்கு பெயர் பெற்றவை. விபத்தின்போது, ஒரு பெட்டி மற்றொரு பெட்டியைவிட மேலெழும்புவதைத் தடுக்கும் மெக்கானிசத்தைக் கொண்டுள்ளன. தீ தடுப்பு பொருட்களால் கட்டமைக்கப்பட்ட இந்தப் பெட்டிகள், தீ விபத்து ஏற்படும் அபாயங்களைக் கணிசமாக குறைக்கின்றன.
வேகத்தை பொறுத்தவரை, LHB பெட்டிகள் ICF மாடல்களைவிட சிறந்து விளங்குகின்றன. பழைய பெட்டிகள் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்ல முடியும் என்றாலும், LHB பெட்டிகள் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்குகின்றன மற்றும் மணிக்கு 200 கி.மீ. வேகத்தை எட்ட முடியும்.
இந்திய ரயில்வே வரும் 2030ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஐசிஎஃப் பெட்டிகளையும் படிப்படியாக நிறுத்த இலக்கு வைத்துள்ளது. தற்போது, ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ போன்ற பிரீமியம் ரயில்கள் ஏற்கனவே எல்ஹெச்பி பெட்டிகளில் மட்டுமே இயக்கப்படுகின்றன. மத்திய ரயில்வேயின் சமீபத்திய அறிவிப்பு இந்த மாற்றத்தை மேலும் துரிதப்படுத்தும்.
November 27, 2025 8:28 PM IST


