Last Updated:
ஒரு கிலோ 700 முதல் 800 ரூபாய் இல் விற்பனை செய்யப்படும் ஆனால் இந்த வாரம் ஒரு கிலோ 1500 ரூபாய் என்ற விலைகளில் நிர்ணயம் செய்யப்பட்டு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது விராலிமலை. இங்கு அமைந்துள்ள முருகன் கோவில் மற்றும் மயில்கள் சரணாலயம் ஆகியவை சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் சிறப்பாக இங்கு ஆட்டுச் சந்தையும் உள்ளது.
விராலிமலையில் வாரம்தோறும் திங்கட்கிழமை விராலிமலை பேருந்து நிலையம் அருகே நடைபெறும் ஆட்டு சந்தை அப்பகுதிகளில் மிகவும் பிரபலமாகும். அதிகாலை முதலே தொடங்கும் இந்த ஆட்டு சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், முதல் நாள் இரவில் வாகனங்களில் விராலிமலைக்கு வந்து தங்கி இருந்து ஆடுகளை வாங்கி செல்லுவது வழக்கமானது ஆகும்.
இந்த சந்தைக்கு புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி, சென்னை மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில் இருந்தும் வியாபாரிகள் வந்து விராலிமலை சந்தையில் ஆடுகளை வாங்கி செல்வது என்பது விராலிமலை ஆடுகளின் தனி சிறப்பாகும். இயற்கையான முறையில் மட்டுமே வளர்க்கப்படும் இந்த ஆடுகளின் இறைச்சி கடைக்காரர்கள் மாமிசமாக விற்கும் போது மக்கள் அதிகளவில் விரும்பி வாங்கி செல்வதாக இங்கு வந்து ஆடுகள் வாங்கி செல்லும் இறைச்சிக்கடைக்காரர்கள் கூறுகின்றனர்.
மேலும் தீபாவளி, ரம்ஜான், போன்ற பண்டிகை காலங்களிலும் திருவிழா நடைபெறும் நாட்களிலும் விராலிமலை ஆட்டுச் சந்தையில் கோடி கணக்கில் வியாபாரம் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் சித்திரை மாத திருவிழாக்கள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக விராலிமலை ஆட்டு சந்தையில் வியாபாரம் ஒன்றரை கோடிக்கு மேலாக நடந்ததனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சித்திரை திருவிழாக்களுக்கு கோவில்களில் ஆடுகளை நேர்த்திக்கடனாக வெட்டி விருந்து போடும் வழக்கம் பல்வேறு பகுதிகளில் உள்ளது. அதற்காக அதிக அளவில் ஆடுகளை வாங்க மக்கள் குவிந்ததால் விராலிமலை ஆட்டு சந்தை களைகட்டியது. வழக்கமாக ஒரு கிலோ 700 முதல் 800 ரூபாய் இல் விற்பனை செய்யப்படும் ஆனால் இந்த வாரம் ஒரு கிலோ 1500 ரூபாய் என்ற விலைகளில் நிர்ணயம் செய்யப்பட்டு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
விராலிமலையில் 1.5 கோடிக்கு விற்பனையான ஆடுகள்!! சித்திரை திருவிழாவையொட்டி களைகட்டிய ஆட்டுச்சந்தை…

