பெர்த்: ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களான விராட் கோலி, ரோஹித் சர்மா தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் வரும் 19-ம் தேதி பெர்த் நகரில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி வீரர்கள் 2 கட்டமாக நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றிருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை பெர்த் நகரை இந்திய அணி வீரர்கள் சென்றடைந்தனர். இதைத் தொடர்ந்து விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் உடனடியாக பயிற்சியை தொடங்கினார்கள். இருவரும் சுமார் 30 நிமிடங்கள் வலையில் தீவிர பேட்டிங் பயிற்சி செய்தனர். இதுதொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் டி20, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டனர். இருவரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றனர். கடைசியாக இவர்கள், கடந்த பிப்ரவரி-மார்ச் மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி இருந்தார்கள். பேட்டிங் பயிற்சி முடிந்த பின்னர் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீருடன், ரோஹித் சர்மா நீண்ட நேரம் பேசிக்
கொண்டிருந்தார். அதேவேளையில் விராட் கோலி, பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கலுடன் சிறிது நேரம் ஆலோசித்தார்.
ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. மேலும் 2027-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரில் இவர்கள் இருவரும் விளையாடுவதற்கு திறன், நுணுக்கங்கள், உடற்தகுதி உள்ளிட்ட விஷயங்களில் எந்த வகையில் முனைப்புடன் உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கும் ஆஸ்திரேலிய தொடர் உதவக்கூடும். இந்திய அணி வீரர்கள் இன்றும், நாளையும் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.