ஹனோய்:
ஆசியாவை அதிர்ச்சியடையச் செய்த கால்மேகி சூறாவளி தற்போது வியட்னாமில் கரையைக் கடந்துள்ளது. இந்த ஆண்டில் உலகம் முழுவதும் பெரும் அழிவை ஏற்படுத்திய முக்கியமான புயல்களில் ஒன்றாக இது குறிப்பிடப்படுகிறது.
வியட்னாமின் மத்திய கடலோர வட்டாரங்களில் புயல் கரையைக் கடப்பதற்கு முன்பே அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர். கால்மேகி புயல் மணிக்கு 149 கிலோமீட்டர் வேகத்தில் வீசியது என வியட்னாமின் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
புயலின் தாக்கத்தில் வீடுகளின் கூரைகள் பறந்தன, மரங்களும் மின்கம்பங்களும் வேரோடு சாய்ந்தன. கடலோரப் பகுதிகளில் அலைகள் 10 மீட்டர் உயரம் வரை எழுந்தன. இதனால் பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
முன்னதாக வாரத்தின் தொடக்கத்தில் கால்மேகி பிலிப்பீன்சில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. அங்கு 140 பேர் உயிரிழந்தனர், மேலும் 125 பேர் காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டது மற்றும் நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
வியட்னாமிலும் நிலைமை கடுமையாக இருப்பதால் ஆறு முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஜியா லாய் மாநிலத்திலிருந்து 2.6 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அரசாங்கம் தெரிவித்ததாவது: “தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக 268,000க்கும் மேற்பட்ட படைவீரர்கள் தயார்நிலையில் உள்ளனர். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுக்கலாம்; வேளாண் நிலங்களும் பெரிதும் சேதமடையக்கூடும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது, 2025 ஆம் ஆண்டில் வியட்னாமைத் தாக்கிய 13வது சூறாவளி எனவும் பதிவாகியுள்ளது.




