Last Updated:
மேக்னெட்டிக் லெவிட்டேஷன் (Maglev) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சீனா ஒரு புதிய அதிவேக ரயிலை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனா கடந்த சில ஆண்டுகளாக தனது அதிவேக ரயில் நெட்ஒர்க்கில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த சூழலில், விமானங்களுடன் போட்டியிடக்கூடிய அதிவேக ரயிலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக ஒரு விமானம் மணிக்கு 800 முதல் 900 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. ஆனால், சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்திய அதிவேக ரயிலானது மணிக்கு 600 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கிறது.
சீனாவில் சமீபத்தில் நடந்த 17வது நவீன ரயில்வே கண்காட்சியில் இந்த ரயிலைக் காட்சிப்படுத்தியது. சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில், மாக்லேவ் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. ரயில் ஓடும்போது, அதற்கு தண்டவாளத்துடன் எந்த தொடர்பும் இருக்காது. இந்த தொழில்நுட்பத்தால் உராய்வு ஏற்படாது, பயணம் மிகவும் சீராக முடிகிறது.
மேக்னெட்டிக் லெவிட்டேஷன் (Maglev) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சீனா ஒரு புதிய அதிவேக ரயிலை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது 7 விநாடிகளில் மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் இடையேயான தூரம் 1,200 கிலோ மீட்டர் ஆகும். தற்போது, இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையிலான பயணம் 5.30 மணி நேரம் ஆகிறது. இந்நிலையில் சீனாவின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Maglev அதிவேக ரயில் வெறும் 150 நிமிடங்களில் (அதாவது 2.5 மணி நேரத்தில்) இலக்கை அடையும்.
சீனாவின் அதிவேக ரயில் அமைப்பு உலகிலேயே மிகப்பெரியது. கடந்த ஆண்டு இறுதிக்குள், அதிவேக ரயில் நெட்வொர்க் மொத்தம் 48,000 கிலோ மீட்டராக விரிவடைந்துள்ளது. 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் இதை 50,000 கிலோமீட்டராக அதிகரிக்க சீனா இலக்கு வைத்துள்ளது. மேக்னெட்டிக் லெவிட்டேஷன் தொழில்நுட்பமானது, மேக்னெட்டிக் ஃபீல்டுகளை பயன்படுத்தி ரயிலை தண்டவாளத்திலிருந்து தூக்குகிறது. இதனால் ரயில் தண்டவாளத்தைத் தொடாமல் காற்றில் பயணிக்க அனுமதிக்கிறது. இது உராய்வை முற்றிலுமாகக் குறைக்கிறது. இதன் விளைவாக, ரயில் மிகவும் சீராகவும், அமைதியாகவும், மிக விரைவாகவும் பயணிக்கிறது. காற்றின் எதிர்ப்பைக் குறைக்க தனித்துவமான, நீண்ட கூர்மையான முகத்தை கொண்டுள்ளது.
ஜூன் மாதம், சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள டோங்கு ஆய்வகத்தில் நடந்த சோதனை ஓட்டத்தின்போது, 1.1 டன் எடையுள்ள ஒரு மாக்லேவ் ரயில், 1968 அடி தண்டவாளத்தில் 7 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் 404 மைல் (மணிக்கு சுமார் 650 கிமீ) வேகத்தை எட்டியது. இந்த ரயில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. ராயின் உள்ளே அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது. விசாலமான கேபின் மற்றும் பெரிய டிஜிட்டல் ஸ்கிரீன்கள் ஆகியவை பயணிகளுக்கு வசதியான மற்றும் அதிநவீன அனுபவத்தை வழங்குகின்றன.
2023ஆம் ஆண்டு நடந்த முந்தைய சோதனையில், இந்த தொழில்நுட்பம் மணிக்கு 620 மைல்களுக்கு மேல் (சுமார் 1,000 கிமீ/மணி) வேகத்தை எட்டியது. இது ஒரு விமானத்தைவிட (மணிக்கு 547-575 மைல்கள்) வேகமானது. காற்று எதிர்ப்பு இல்லாத ஒரு வேக்கம் டியூபில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த அதிவேக மாக்லேவ் ரயிலை சீனா ரயில்வே ரோலிங் ஸ்டாக் கார்ப்பரேஷன்(CRRC) வடிவமைத்துள்ளது. இந்த அதிவேக ரயிலை இந்த ஆண்டு ஜூன் மாதம் சோதனை செய்யப்பட்டது. இது மக்களின் பயன்பாட்டுக்கு வந்தால், உலகின் வேகமான ரயில் என்ற வரலாற்றை உருவாக்கும்.
July 16, 2025 1:29 PM IST
விமானத்தைவிட வேகமாக இயங்கும் ரயில் இதுதான்…! 1,200 கிலோமீட்டர் தூரத்தை 150 நிமிடங்களில் எட்டும்…


