Last Updated:
இண்டிகோ விமானத்தில் பயணித்த உத்தரப் பிரதேசத்தின் மாவ் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் அவசர கால வழியை திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூருவில் இருந்து வாரணாசிக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் அவசரகால வெளியேறும் கதவை திடீரென திறக்க முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பயணத்தின்போது இரண்டு முறை அத்துமீறிய நபர் விசாரணையின்போது அளித்த திடுக்கிடும் வாக்குமூலம் என்ன?
பெங்களூருவிலிருந்து இரவு சுமார் 8:15 மணியளவில் வாரணாசிக்குச் இண்டிகோ விமானம் 6E-185 புறப்பட்டது. அதில் உத்தரப் பிரதேசத்தின் மாவ் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அட்னான் என்பவரும் பயணித்தார். பயணம் தொடங்கிய 15 நிமிடங்களில் தனது சீட்டிலிருந்து எழுந்த அட்னான் வேகமாக சென்று விமானத்தின் அவசரகால கதவைத் திறக்க முயன்றிருக்கிறார். அதிர்ந்துபோன விமானப் பணியாளர்கள், உடனே அவரைத் தடுத்து நிறுத்தி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். உடனே நிதானத்துக்கு வந்ததுபோல் காட்டிக் கொண்ட அட்னான் ஒரு குழப்பத்தில் பாத்ரூம் கதவு என நினைத்து அந்த கதவைத் திறந்துவிட்டதாகத் தெரிவித்ததும், எச்சரிக்கையுடன் அவரை விடுவித்தனர்.
வாரணாசியில் இருந்து லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும்வரை அட்னான் சாதாரணமாகவே நடந்து கொண்டார். இரவு சுமார் 10.20 மணிக்கு விமானத்தை தரையிறக்க விமானி முயன்று கொண்டிருந்தார். விமானம் 500 அடி உயரத்தில் இருந்தபோது, அட்னான் மீண்டும் இருக்கையிலிருந்து எழுந்துள்ளார். ஆவேசமாக சென்ற அவர் அவசரகால வெளியேறும் கதவை மீண்டும் திறக்க முயன்றார். அதைப் பார்த்து அதிர்ந்து போன விமானப் பணியாளர்கள் உடனே காக்பிட்டில் உள்ள விமானிகளுக்கு எச்சரிக்கை கொடுத்தனர். சுதாரித்துக் கொண்ட விமானிகள் தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனே மீண்டும் வானத்தில் வட்டமிட ஆரம்பித்தனர்.
அதன்பின்னர், அட்னானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபின், இரவு 10.35 மணிக்கு விமானம் தரையிறக்கப்பட்டது. அட்னானின் செயலால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். பாதுகாப்பாக தரையிறக்கியதும், விமானக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இதையடுத்து அட்னான், விமான நிறுவனத்தின் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வசம் ஒப்படைக்கப்பட்டார். காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காவல் நிலையத்தில் அவரை விசாரித்தபோது, கோவாவில் விடுமுறையைக் கழித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்ததாகவும், தான் இழுத்த கைப்பிடி அவசரகால வெளியேறும் கதவை இயக்கும் என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியிருக்கிறார். அவர் கூறியதை நம்பாத போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Bangalore,Karnataka


