Last Updated:
சில நாட்களுக்கு முன் டெல்லி-திமாபூர் இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, விமானங்களில் பவர் பேங்க்ஸ்களைப் பயன்படுத்துவது குறித்து கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த DGCA திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் டெல்லியில் இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, இந்திய விமானங்களில் பவர் பேங்க்ஸ்களை பயன்படுத்த நாடு தழுவிய தடை அல்லது கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சில நாட்களுக்கு முன் டெல்லி-திமாபூர் இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, விமானங்களில் பவர் பேங்க்ஸ்களைப் பயன்படுத்துவது குறித்து கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த DGCA திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 19-ஆம் தேதி டெல்லியில் இருந்து திமாப்பூருக்கு கிளம்ப இருந்த இண்டிகோ விமானத்தில், பயணி ஒருவர் வைத்திருந்த லித்தியம் பேட்டரியால் ஆன பவர் பேங்க் திடீரென தீப்பிடித்தது. ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.
லித்தியம் பேட்டரியில் இயங்கும் டிவைஸ்கள் குறித்த பாதுகாப்பு கவலைகள் அதிகரித்து வரும்நிலையில் இந்த தீ விபத்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்காக பயணிகள் மற்றும் விமான நிறுவனங்கள் இரு தரப்பினாலும் விமானங்களில் பவர் பேங்குகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது குறித்து DGCA ஒரு விரிவான மதிப்பாய்வை செய்ய தொடங்கியுள்ளது.
இந்த மதிப்பாய்வின் முடிவில்தான் விமானத்தில் பவர் பேங்குகளை பயன்படுத்துவதைத் தடைசெய்ய, அதன் கெபாசிட்டியில் கட்டுப்பாடுகள் விதிக்க அல்லது அபாயங்களை அறவே குறைக்க விமானத்தில் பவர்பேங்க் எடுத்து செல்வதையே முற்றிலுமாக தடைசெய்ய என ஏதாவதொரு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கும் (MoCA) இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
தீ விபத்து குறித்து இண்டிகோ விமான நிறுவனம் கூறியதாவது, கடந்த அக்டோபர் 19ஆம் தேதி டெல்லியில் இருந்து நாகாலாந்தின் திமாபூருக்கு இயக்கப்படும் 6E 2107 விமானமானது, சீட்-பேக் பாக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு பயணியின் தனிப்பட்ட எலெக்ட்ரானிக் உபகரணம் ஒன்றால் ஏற்பட்ட சிறிய தீ விபத்து காரணமாக மீண்டும் விமான நிலையத்திற்குத் திரும்பியதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும், விமான பணி குழுவினர் நிலைமையை சிறப்பாக கையாண்டு தீ விபத்து நிகழ்ந்த ஒரு சில நொடிகளில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக அக்டோபர் மாத தொடக்கத்தில், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அதன் அனைத்து விமானங்களிலும் பவர் பேங்க்ஸ்களைப் பயன்படுத்துவதை தடைசெய்தது. எனினும், பயணிகள் தற்போது 1100 watt-hours-க்கும் குறைவான பவர் பேங்க்ஸ்களை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும், அவற்றை சார்ஜ் செய்வதற்கோ அல்லது விமானத்தில் அவற்றை கொண்டு மொபைல் டிவைஸ்களுக்கு சார்ஜ் செய்யவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் முதல் விமானப் பயணத்தின் நடுவில் பவர் பேங்க்ஸ்களைப் பயன்படுத்துவதையோ அல்லது சார்ஜ் செய்வதையோ தடைசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
October 24, 2025 6:10 PM IST
விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்த தடையா…? சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கூறுவது என்ன…?


