மகளிர் தினத்தை முன்னிட்டு கொமர்ஷல் வங்கியின் முள்ளியவளை கிளையினால் நடாத்தப்பட்ட வினாடிவினா (quiz) போட்டியில் வற்றாப்பளை மகா வித்தியாலய பாடசாலை மாணவிகள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
கொமர்ஷல் வங்கியின் முள்ளியவளை கிளையினர் முல்லைத்தீவு கல்வி வலயத்துடன் இணைந்து முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவிகளுக்கிடையில் மகளிரை கௌரவப்படுத்தும் முகமாக வினாடி விடை (quiz) போட்டியொன்றை (06) முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் நடாத்தியிருந்தனர்.
இதனடிப்படையில் நேற்றுமுன்தினம் மாலை முல்லைத்தீவு மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட 21 பாடசாலைகளைச் சேர்ந்த பெண் பிள்ளைகளுக்கிடையில் வினாடிவினா போட்டி நடைபெற்றது.
ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் தலா மூன்று மாணவிகள் தெரிவு செய்யப்பட்டு குழுக்களுக்கிடையிலான போட்டியாக இப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் முல்லைத்தீவு வற்றாப்பளை மகா வித்தியாலய மாணவிகளின் குழு முதலாமிடத்தை பெற்றுக் கொண்ட அதேவேளை முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை மாணவிகள் குழு இரண்டாமிடத்தையும் முல்லைத்தீவு குமுழமுனை மகா வித்தியாலய பாடசாலை மாணவிகள் குழு மூன்றாமிடத்தையும் முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலய பாடசாலை மாணவிகள் குழு நான்காமிடத்தையும் முல்லைத்தீவு இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலய பாடசாலை மாணவிகள் குழு ஐந்தாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
(மாங்குளம் குரூப் நிருபர்)