Last Updated:
நாசா அறிவிப்பின் படி, இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்கள் ஜூலை 14ஆம் தேதி பூமிக்கு திரும்ப உள்ளனர்.
விண்வெளி நிலையத்தில் ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்கள் வரும் 14 ஆம் தேதி பூமிக்கு திரும்ப உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின், டிராகன் விண்கலம் வாயிலாக, ஆக்சியம் மிஷன் 4 திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் கடந்த 25 ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். சுமார் 28 மணிநேர பயணத்திற்கு பிறகு கடந்த 26 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை இந்த விண்கலம் சென்றடைந்தது.
அதன்பின் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, வெந்தயம், பச்சை பயிறுகளை முளைக்கச் செய்வது உள்ளிட்ட மூன்று ஆய்வுகளை மேற்கொண்டார்.

இந்நிலையில், சுக்லா மற்றும் அவரோடு சேர்ந்த மூன்று குழுவினரும் பூமிக்கு திரும்பும் பயணம் ஜூலை 14ஆம் தேதி தொடங்கும் என்று நாசா நேற்று மாலை அறிவித்தது. மேலும் விண்வெளியிலிருந்து வீடு திரும்புவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவரும் மற்ற குழு உறுப்பினர்களும் விருந்தில் கலந்துகொண்டனர். இதன் புகைப்படங்களை சுற்றுப்பாதை ஆய்வகத்திலிருந்து மக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளனர்.
புதிதாக வெளியிடப்பட்ட படங்களில், சுக்லாவும் அவரது குழுவினரும் பூஜ்ஜிய ஈர்ப்பு விசை காரணமாக ஆய்வகத்திற்கு மிதந்தபடி செல்வது, புன்னகை மலர அனைவரும் உணவை ரசிப்பது போன்றவற்றை இந்தப் புகைப்படங்களில் நம்மால் காண முடிகிறது. “நாங்கள் நிலையத் திட்டத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம், ஆக்ஸியம்-4 முன்னேற்றத்தை கவனமாகக் கண்காணித்து வருகிறோம்” என்று நாசா ஜூலை 10 ஆம் தேதி மாலை அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட வீரர்கள் வரும் 14 ஆம் தேதி பூமிக்கு புறப்பட உள்ள நிலையில் விண்வெளி நிலையத்திலிருந்து பூமி திரும்ப உள்ள வீரர்களை வரவேற்க விஞ்ஞானிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
July 11, 2025 2:55 PM IST
விண்வெளி நிலையத்தில் ஆய்வுப் பணி.. சுபான்ஷு சுக்லா பூமிக்கு திரும்புவது எப்போது..? நாசா வெளியிட்ட அப்டேட்!