Last Updated:
தெலங்கானா மாநிலத்தில் பள்ளி விடுதி சமையலர் மாணவர்களை துடைப்பத்தால் தாக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் உள்ள விடுதியில் பள்ளி மாணவர்களை துடைப்பத்தால் சமையலர் அடித்து தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மது போதைக்கு அடிமையாகி அடாவடி செய்பவர் மீது நடவடிக்கை பாயுமா? நடந்தது என்ன?
தெலங்கானா மாநிலம் ஜதித்யாலாவில் பழங்குடியினர் அரசு மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கியுள்ளனர். விடுதியில் பணியாற்றும் சமையலர் சீனிவாஸ் நாள்தோறும் குடித்துவிட்டு அங்கேயே அக்கப்போர் செய்துள்ளார். நாளுக்கு நாள் இவரது அட்டூழியம் அதிகரித்துள்ளது. ஆனால், விடுதி காப்பாளர் உட்பட பலரும் அதை கண்டும் காணாமலும் இருந்துள்ளனர்.
இந்த நிலையில், மது போதையில் வந்த சமையலர் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அலப்பறையைக் கூட்டியுள்ளார். அதை அங்கிருந்த மாணவர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். வீடியோ ஊர் முழுவதும் பரவியதும் மாணவர்கள் மீது சமையலர் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இருந்தபோதும், வீடியோ எடுத்தது யார் என்பது தெரியாமல் குழம்பியுள்ளார். இதனால், அனைத்து மாணவர்களையும் பழிவாங்குவதற்காக துடித்துள்ளார். இதையடுத்து, கையில் துடைப்பத்தை எடுத்துள்ளார். அதை பிடித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களை எழுப்பிவிட்டு தாக்கியுள்ளார்.
தொடர்ந்து ஒவ்வொரு மாணவரை நீ தான் தனக்கு எதிராக செயல்பட்டாயா? எனக் கேட்டபடி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதையும் யாரோ ஒரு மாணவர் தனது செல்போனில் படம்பிடித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

