
வட ஆந்திரப் பிரதேசக் கரைக்கு மேல் உள்ள ஆழமான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, கலிங்கப்பட்டினத்திற்கு தென்மேற்கே கரையை கடந்துள்ளதால், பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்த சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (24) காலை 05.30 மணியளவில் வட ஆந்திரக் கடற்கரைக்கு அருகில், அட்சரேகை 18.3°N மற்றும் தீர்க்கரேகை 83.7°E இல், கங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கே சுமார் 1100 கி.மீ தொலைவில் மையமிட்டுள்ளது.
இப்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். அத்துடன் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால், கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைக்குரிய கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 55-65 கி.மீ வரை அதிகரிக்கும். இதனால் கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படும்.
மறு அறிவித்தல் வரை அட்சரேகை 10°N முதல் 22°N வரை மற்றும் தீர்க்கரேகை 82°E முதல் 90°E வரை உள்ள கடல் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.
குறிப்பிட்ட கடல் பகுதிகளில் ஏற்கனவே நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் உடனடியாக அவ்விடங்களை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

